உலகெங்கிலும் உள்ள சிறப்புத் திறன்கள் மற்றும் நிபுணத்துவம் கொண்ட வல்லுநர்கள் துபாயில் ஃப்ரீலான்ஸராக வேலை செய்யும் விதமாக ‘டேலண்ட் பாஸ் (‘Talent Pass’)’ எனும் புதிய உரிமம் துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளிலும் வசிக்கக் கூடிய ஊடகம், கல்வி, தொழில்நுட்பம், ஆர்ட்ஸ், மார்க்கெட்டிங் மற்றும் கன்சல்டன்சி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் திறமையாளர்களையும் நிபுணர்களையும் ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய டேலண்ட் பாஸ் உரிமத்தை துபாயில் உள்ள அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
துபாய் ஏர்போர்ட் ஃப்ரீஸோன் (DAFZ) ஆனது, துபாய் கலாச்சாரம் (Dubai Culture) மற்றும் துபாயின் வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்துடன் (GDRFA) இனைந்து இந்த புதிய முயற்சியை எளிதாக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. வல்லுநர்கள் விசா பெறுவதற்கும் உரிமங்களை பெறுவதற்கும் மற்றும் அவர்களின் வணிகத்தை நிறுவுதல், இயக்குதல் மற்றும் மேம்படுத்துதல் போன்றவற்றில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற பிற சேவைகளை செயல்படுத்துவதற்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், டேலண்ட் பாஸ் உரிமம் பெற்றவர்கள் DAFZA வழங்கும் அலுவலக இடத்தை வாடகைக்கு எடுப்பதுடன், அமீரகத்தில் தங்குவதற்கான மூன்று வருட குடியிருப்பு விசாவையும் பெற முடியும். மேலும் அவர்களுக்கு அலுவலகம் தொடர்பான தீர்வுகள், எதிர்காலத்திலும் தொடர்ந்து ஆதரவு, நெகிழ்வான செயல்பாட்டு செலவுகள் மற்றும் தொலைதூரத்தில் இருந்தே சேவைகளைப் பெரும் வாய்ப்பு போன்ற பல்வேறு வசதிகளை இந்த உரிமம் பெற்றவர்கள் பெறுவார்கள்.
இது தவிர, உரிமம் வைத்திருப்பவர்கள் சர்வதேச நிறுவனங்கள் முதல் தொழில்முனைவோர் வரையிலான அனைத்து DAFZ வாடிக்கையாளர்களின் நெட்வொர்க்கை அணுக முடியும். அத்துடன் பிற நிறுவனங்களுடன் போடப்படும் காண்ட்ராக்ட் மற்றும் சேவைகளுக்கான எளிதான அணுகலுக்காக வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள அனுமதிக்கும் டிஜிட்டல் தளத்திற்கான அணுகலையும் அவர்கள் பெறுவார்கள்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, துபாய் ஏர்போர்ட் ஃப்ரீஸோன் டேலண்ட் பாஸிற்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து செயல்படுத்தும் மற்றும் ஃப்ரீஸோன் பகுதிக்குள் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிமையாளரை அங்கீகரிக்கும் உரிமங்களை வழங்கும். துபாய் ஏர்போர்ட் ஃப்ரீஸோன், 20 க்கும் மேற்பட்ட முக்கிய பொருளாதாரத் துறைகளில் 1,800 க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு சர்வதேச நிறுவனங்கள் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன.
DAFZ வின் மதிப்பாய்விற்கு பிறகு உரிமம் பெரும் நிபுணர்களுக்கு துபாய் கலாச்சாரம் ‘கலாச்சார விசா’வை வழங்கும். GDRFA ஆனது DAFZ ஐ உலகளாவிய வணிகங்களுக்கான விருப்பமான இடமாகவும், துபாயை வணிக நட்புச் சூழலாகவும் ஊக்குவிக்கும். மேலும் இந்த புதிய முயற்சி, உலகின் பல நாடுகளில் வசிக்கக்கூடிய திறமையான தனிநபர்கள் ஒரு பெரிய நுகர்வோர் சந்தையில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது.