ஐக்கிய அரபு அமீரகத்தின் 50 ஆவது பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில் அமீரகத்தில் நடைபெறவுள்ள சைக்கிள் பயணத்திற்காக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் எக்ஸ்போ 2020 க்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது. அதில் ஐக்கிய அரபு அமீரக பொன்விழா கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில் எக்ஸ்போவின் பார்க்கிங் நுழைவாயிலில் தாமதம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.
அபுதாபியிலிருந்து ஷேக் முகமது பின் சயீத் சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கான மொபிலிட்டி பார்க்கிங் நுழைவாயில்கள் ஒவ்வொன்றிலும், எக்ஸ்போ ரோடு மற்றும் ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலையிலிருந்து வருபவர்களுக்கான வேர்ல்ட் பார்க்கிங்கிலும் தாமதம் ஏற்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது வாகன ஓட்டிகளுக்கு பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை சாலைகளில் இந்த தாமதம் ஏற்படும் என்றும் கூறியுள்ளது. அத்துடன் வாகன ஓட்டிகள் கொண்டாட்டத்தின் போது கவனமாக வாகனம் ஓட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரக தலைநகரில் ஐக்கிய அரபு அமீரக பொன்விழா கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC), ஜனவரி 25 செவ்வாய் அன்று அபுதாபியில் சாலை மூடல்களை அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ITC, அபுதாபியின் முக்கிய சாலைகளான ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் சாலை (E10), ஷேக் மக்தூம் பின் ரஷித் சாலை (E11) மற்றும் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சாலை (E311) ஆகிய சாலைகள் அனைத்தும் செவ்வாய்கிழமை மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை சைக்கிள் சுற்றுப்பயணம் கடந்து செல்லும் போது மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.