ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் பிப்ரவரி 2 ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள, தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய தொழிலாளர் சட்டம் 2021 ஆம் ஆண்டின் ஆணை எண் 33 ன் படி, தனியார் துறையில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கான வரையறுக்கப்பட்ட வருடாந்திர விடுமுறைக்கான (Annual Leave) விதிகளை அமீரக அரசு அறிவித்துளளது.
ஐக்கிய அரபு அமீரக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தனியார் துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய ஒரு தொழிலாளி, தனது சேவையின் ஆண்டு ஒன்றுக்கு குறைந்தது 30 நாட்கள் முழு ஊதியத்துடன் வருடாந்திர விடுமுறை பெறுவதற்கு தகுதியுடையவர் என்று கூறப்பட்டுளளது.
அதுவே அந்த தொழிலாளி நிறுவனத்தில் பணிபுரிந்த சேவை காலம் ஆறு மாதங்களுக்கு மேல் மற்றும் ஒரு வருடத்திற்கு குறைவாக இருந்தால் மாதத்திற்கு இரண்டு நாட்கள் என்ற அடிப்படையில் அவர் வருடாந்திர விடுமுறை பெறுவதற்கு தகுதியுடையவர் என்றும் புதிய தொழிலாளர் சட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று பகுதி நேரமாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிய ஒப்பந்தம் போட்டுக்கொண்ட ஒரு தொழிலாளி, நிறுவனம் இயங்கும் உண்மையான வேலை நேரத்தைப் பொறுத்து வருடாந்திர விடுப்புக்கு தகுதியானவர் என்றும் இந்த புதிய சட்டம் விளக்குகிறது.
மேலும் இந்த வேலை நேரமானது பகுதி நேரமாக பணிபுரியும் தொழிலாளி மற்றும் நிறுவன முதலாளிக்கு இடையேயான வேலை ஒப்பந்தத்தில் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளின்படி தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரக அரசானது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த தனியார் துறை தொழிலாளர்களுக்கான தொழிலாளர் சட்டத்தில் கடந்த ஆண்டு பல திருத்தங்களை மேற்கொண்டு புதிய தொழிலாளர் நல சட்டத்தை அறிவித்திருந்தது. அமீரகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனில் கூடுதல் அக்கறையுடன் மேம்படுத்தப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் இந்த புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.