ஐக்கிய அரபு அமீரகத்தில் இத்தனை நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வந்த வார வேலை நாட்களில் மாற்றம் செய்யப்பட்டு புதிய வார வேலை நாட்கள் இன்று ஜனவரி 3 ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை என அமீரகத்தில் பின்பற்றப்பட்டு வந்த வேலை நாட்கள் இன்று முதல் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி வரை மொத்தம் நான்கரை நாட்களாக இனி வரும் நாட்களில் தொடரும் என்பது கவனிக்கத்தக்கது.
அமீரக அரசின் இந்த புதிய வார வேலை நாட்களின் மூலம் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை நாட்களாக இருந்துவந்த நிலையில், அது தற்போது நான்கரை நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாரத்தில் இரண்டு நாள் விடுமுறையை அனுபவித்துவந்த பலரும் இனி இரண்டரை நாட்கள் விடுமுறையை அனுபவிக்க முடியும். எனினும் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மட்டுமே அதிகாரபூர்வகமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தனியார் துறையை பொறுத்தவரை, நிறுவன முதலாளிகள் தங்களுக்கு ஏற்றவாறு வார வேலை நாட்களை அமைத்து கொள்ளலாம் என்றும், வாரத்தில் ஒருநாள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அமீரக அரசு அறிவுறுத்தியிருந்தது. அதே போன்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை என்பதனால் தனியார் துறை ஊழியர்கள் தொழுகையில் கலந்துகொள்ள போதிய நேரம் இடைவேளையாக அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
மேலும் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி வரை வேலை நேரம் என்பதால், அவர்கள் பங்கேற்கும் விதமாக வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் மதியம் 1.15 மணிக்கு பின்னரே தொடங்கும் என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் 30 சதவீதத்திற்கும் குறைவான தனியார் துறை நிறுவனங்களே அரசு துறைகளை போன்று புதிய வார வேலை நாட்களான நான்கரை நாட்களை பின்பற்றப்போவதாக அறிவித்துள்ளது. இருப்பினும் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் ஒருநாள் விடுமுறையை மட்டும் தொடரும் என்றும், நிறுவனத்தை பொறுத்து அது எந்த நாள் என்பது நிர்ணயிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமீரகம் முழுவதும் இந்த புதிய வார வேலை நாட்களான நான்கரை நாள் இன்று முதல் அமலுக்கு வந்த போதிலும், ஷார்ஜாவில் மட்டும் வெள்ளிக்கிழமை முழு நேர விடுமுறை என்பதால் வேலை நாட்கள் மேலும் குறைக்கப்பட்டு நான்கு நாட்கள் வேலை நாட்களாகவும், மூன்று நாட்கள் விடுமுறையாகவும் தொடரவுள்ளது. அதேபோன்று வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்திலும் மாற்றம் இருக்காது எனவும், இஸ்லாமிய காலண்டரின்படி வழக்கமான நேரத்திலேயே தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் தொடரும் எனவும் ஷார்ஜா அரசு கூறியுள்ளது.
அமீரக அரசின் இந்த புதிய வார விடுமுறைக்கு ஏற்ப அமீரகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் தங்களின் வேலை நாட்களை நான்கரை நாட்களாக குறைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.