Uncategorized

துபாய் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட தமிழரின் கண்டுபிடிப்பான “எலக்ட்ரிக் பறக்கும் டாக்ஸி”..!!

எக்ஸ்போ 2020 துபாயின் இந்தியா பெவிலியனில் உள்ள புதுமைகளை வழங்கும் இன்னோவேஷன் மையமானது அறிவியல், சுகாதாரம், பாதுகாப்பு போன்ற துறைகளில் பல புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை இதுவரையிலும் காட்சிப்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவின் கண்டுபிடிப்புகளில் அடுத்த ஒரு மைல்கல்லாக எதிர்காலத்தில் நகரத்திற்குள் பயணிக்கும் ஒரு நிலையான, மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்ஸி ஒன்று புதிய கண்டுபிடிப்பாக துபாய் எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ePlane என்ற நிறுவனம், உலகெங்கிலும் உள்ள நகரங்களில் நெரிசலைக் குறைக்க உலகின் மிகச் சிறிய பறக்கும் மின்சார டாக்சிகளை கண்டுபிடித்துள்ளது. இந்த நிறுவனம் ஐஐடி மெட்ராஸின் விண்வெளிப் பொறியியல் துறை பேராசிரியர் சத்தியநாராயணன் சக்கரவர்த்தி மற்றும் ஐஐடி மெட்ராஸில் பயின்று 2019 ஆம் ஆண்டுபட்டம் பெற்ற பிரஞ்சல் மேத்தா ஆகியோரால் 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளது.

e200 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் டாக்ஸிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ePlane நிறுவனம், இந்தியாவில் பயணம் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக இதனை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பத்தை மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா உள்ளிட்ட உலக சந்தைகளுக்கு கொண்டு செல்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த பறக்கும் டாக்ஸி குறித்து பேராசிரியர் சக்ரவர்த்தி கூறுகையில், “இதில் எட்டு ப்ரொப்பல்லர்கள் உள்ளன, இதில் இரண்டு பயணிகளுக்கு இடமளிக்க முடியும், இது இந்தியாவின் முதல் புரட்சிகர மின்சார விமான போக்குவரத்து அமைப்பாகும், இது மக்களை அவர்களின் வீட்டு வாசலில் இருந்து அவர்களின் இறுதி இலக்குக்கு குறைந்த நேரத்தில் மற்றும் மலிவு விலையில் கொண்டு செல்வதில் கவனம் செலுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ePlane நிறுவனத்தின் மற்றொரு நிறுவனரான பிரஞ்சல் மேத்தா கூறுகையில், “நகரங்களுக்கு பாதுகாப்பான, அமைதியான மற்றும் மாசு இல்லாத போக்குவரத்து தேவை, மேலும் சந்தைகளுக்கு மலிவான, அதிக மைலேஜ் மற்றும் விரைவாக சான்றளிக்கக்கூடிய தயாரிப்புகள் தேவை. அதேபோன்று நுகர்வோருக்கு எளிதாக அணுகக்கூடிய, மலிவு மற்றும் தேவைக்கேற்ப பயணம் தேவை”.

“எனவே, எங்கள் தயாரிப்புகள் மூலம் இந்த இலக்குகள் அனைத்தையும் அடைவதை நாங்கள் கற்பனை செய்கிறோம், மக்கள் பத்து மடங்கு வேகமாக பயணிக்க உதவுகிறோம் மற்றும் அவர்களுக்கு கணிசமான நேரத்தை மிச்சப்படுத்துகிறோம்,” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் முதற்கட்ட சோதனை செய்யப்பட்ட இந்த e200 பறக்கும் டாக்ஸியின் முதல் சரக்கு விமானம் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் தயாராக இருக்கும் என்றும், பயணிகள் விமானம் 2024 ம் ஆண்டு டிசம்பருக்குள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறிய மேத்தா, எங்கள் இறுதி இலக்கு உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான, திறமையான, நிலையான மற்றும் முற்றிலும் மின்சார விமான சேவையை வழங்குவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ePlane நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, இந்த e200 பறக்கும் டக்ஸியானது 1500 அடி உயரத்தில் பறக்கும் என்றும், 200 கி.மீ தூரத்திற்கு பறக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கும் என்றும், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்ல கூடிய திறன் கொண்டதாக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!