ADVERTISEMENT

இந்தியா, அமீரகம் இடையேயான வர்த்தகத்தை $100 பில்லியனாக உயர்த்தவுள்ள ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்ன..??

Published: 20 Feb 2022, 12:30 PM |
Updated: 20 Feb 2022, 12:30 PM |
Posted By: admin

இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையேயான வர்த்தக நடவடிக்கையை மேலும் வலுப்படுத்த இந்திய அரசானது அமீரகத்துடன் தடையற்ற வர்த்தக உடன்படிக்கை (Free Trade Agreement – FTA) ஒன்றை போட்டுகொண்டுள்ளது. அமீரகத்துடனான இந்த உடன்படிக்கையானது இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக ஒப்பந்தமாகும். இதற்கு முன்பாக இந்தியா மொரீஷியஸ் உடன் FTA ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ADVERTISEMENT

இரு நாடுகளுக்கும் இடையேயான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உள்ளிட்ட வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்தும் நோக்கில் தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்துடன் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தமானது, சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுடன் இந்தியாவின் FTA ஒப்பந்தங்களை முடுக்கிவிட உதவும் எனவும் கூறப்படுகின்றது.

ஒப்பந்தத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்

>> தடையற்ற வர்த்தக உடன்படிக்கையானது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் இடையிலான வர்த்தகத்தை $60 பில்லியனில் இருந்து $100 பில்லியனாக உயர்த்தும். மேலும் இதில் சேவைகள் வர்த்தகம் $15 பில்லியன் அளவில் அதிகரிக்கும்.

ADVERTISEMENT

>> 2030 ஆம் ஆண்டுக்குள் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் இருந்து அதிக திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கு 140,000 வேலைவாய்ப்பு விசாக்களை வழங்கும். இதனால் வேலைவாய்ப்பும் கணிசமாக உயரும்.

>> இரு நாடுகளும் சேர்த்து 80 சதவீதத்துக்கும் அதிகமான பொருட்கள் மீதான வரிகள் நீக்கப்படும். இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் இரு தரப்பிலும் கூடுதல் கட்டணச் சலுகைகள் கிடைக்கும் மற்றும் 98 சதவீத ஏற்றுமதி மற்றும் 90 சதவீத இறக்குமதிக்கான வரி குறைக்கப்படும்.

ADVERTISEMENT

>> மின்னணு பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் சிமென்ட், மட்பாண்டங்கள் மற்றும் இயந்திரங்கள் உட்பட இந்திய ஏற்றுமதிகள் இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் பூஜ்ஜிய வரி அணுகலைப் பெறலாம். இது அமீரகத்திற்கான தற்போதைய ஏற்றுமதியின் மதிப்பில் சுமார் 9 சதவீதம் ஆகும்.

>> இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் இடையேயான இந்த விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தமானது 2030 ஆம் ஆண்டுக்குள் அமீரக பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பை $9 பில்லியன் அல்லது 1.7% கூடுதலாக உயர்த்தும்.

>> இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த ஒப்பந்தத்தினால் அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வர்த்தகத்தின் மதிப்பு $7.6 பில்லியன் அல்லது 1.5% ஆக அதிகரிக்கும். மேலும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வர்த்தகத்தின் மதிப்பு $14.8 பில்லியன் அல்லது 3.8% ஆக உயரும்.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே போடப்பட்டுள்ள இந்த தடையற்ற வர்த்தக உடன்படிக்கையான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்த ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.