கொரனாவால் விதிக்கப்பட்ட பயண தடைக்கு பிறகு இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்தியாவின் விமான நிலையங்களில் இருந்து ஒரு வாரத்திற்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விமான பயணமானது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதால் மதுரைக்கும் துபாய்க்கும் இடையே இனி தினமும் விமான சேவைகள் இருக்கும் என தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பட்ஜெட் கேரியரான ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அதன் இணையதளத்தில் மதுரையில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் விமான சேவைகளுக்கு வாரத்தில் ஏழு நாட்களுக்கும் டிக்கெட் புக்கிங்கை தொடங்கியிருப்பதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் துபாயில் இருந்து மதுரைக்கும் விமான சேவைகள் தினமும் இயக்கப்படவுள்ளது.
இதனால் பயணிகள் தாங்கள் நினைத்த தேதியில் எப்பொழுது வேண்டுமானாலும் தங்களின் சொந்த ஊர் சென்று வரலாம். இதற்கு முன்னதாக விமான சேவை இருக்கும் நாட்களுக்கு ஏற்பவே பயணிகள் தங்களது டிக்கெட்டினை முன்பதிவு செய்து கொள்ள வேண்டியிருந்தது.
2013 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மதுரையிலிருந்து துபாய்க்கு நேரடி விமான சேவையை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், கடந்த 2020 ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட விமான பயண தடையினால் தனது நேரடி விமான சேவையை நிறுத்தியது. அதன் பிறகு இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே மதுரையிலிருந்து துபாய்க்கு விமானங்களை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.