தொலைந்து போன பொருட்களை கண்டுபிடித்து அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் துபாய் காவல்துறையின் ஸ்மார்ட் சிஸ்டம் மூலம், எமிரேட்டில் தொலைக்கப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட 80,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அதன் உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு 18 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான பணம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
துபாய் காவல்துறையின் செயற்கை நுண்ணறிவுப் பொதுத் துறையால் (AI) உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் சிஸ்டமானது, துபாய் எமிரேட் முழுவதிலும் உள்ள அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டு, தொலைக்கப்பட்ட மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் ஆவணங்கள் அமீரகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உரிமையாளர்களுக்குத் திருப்பித் தரப்படுகின்றது.
தொலைந்து போன பொருட்களை கண்டுபிடித்து அதனை திருப்பி ஒப்படைக்க உதவும் இந்த அமைப்பு குறித்து துறையின் தலைவர் பிரிகேடியர் காலித் நாசர் அல் ரஸூக் கூறுகையில், இது சேவை நேரத்தைக் குறைப்பதாகவும் மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அருகிலுள்ள சேகரிப்பு மையத்தில் வழங்கி அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நடைமுறைகளை எளிதாக்குவதாகவும் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையே அறிவுப்பூர்வமான ஒருங்கிணைப்பின் மூலம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் புதுமையான மற்றும் வசதியான சேவைகளை வழங்குகிறது என்று அல் ரஸூக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
துபாய் காவல்துறையின் இந்த ஸ்மார்ட் சிஸ்டம் தொலைந்து போன பொருட்களின் விவரக்குறிப்புகளை அடையாளம் கண்டு, அந்த பொருட்கள் குறித்து முன்பே பதிவு செய்யப்பட்ட தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன் சரிபார்த்து அதன் உரிமையாளர்களிடம் மீண்டும் திருப்பி ஒப்படைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
துபாயில் இது போன்று தங்களின் பொருட்களை தொலைத்த வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்கள், அரசு நிறுவனங்கள், வணிக மையங்கள், ஹோட்டல்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் போன்ற இடத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் பிரிகேடியர் காலித் நாசர் அல் ரஸூக் தெரிவித்துள்ளார்.