அமீரகத்தில் ரமலான் மாதம் துவங்கவிருப்பதை முன்னிட்டு பல்வேறு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டு ரமலான் மாதத்திற்கான முன்னேற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அதே போல் அமீரகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வேலை நேரங்களும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ரமலான் மாதத்தில் உம் அல் குவைனில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மூன்று நாள் வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வேலை நேரத்தை உம் அல் குவைன் அதிகாரிகள் வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஊழியர்கள் திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பணியாற்றுவார்கள் என்றும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் வார இறுதி விடுமுறை எனவும் கூறப்பட்டுள்ளது.
அமீரகத்தில் 2022 ம் வருடம் துவங்கியது முதல் வாரத்தில் நான்கரை நாட்கள் வேலை நாட்களாகவும் மீதமுள்ள இரண்டரை நாட்கள் விடுமுறை நாட்களாகவும் அரசு அறிவித்து அதன்படி விடுமுறை அளிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.