ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதம் துவங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அமீரகத்தில் இருக்கும் அரசு நிறுவனங்கள் ரமலான் மாத்த்தில் செயல்படும் நேரங்கள் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமீரகமானது உலகின் மிக குறுகிய வார வேலை நாட்களை அறிவித்தது. அதன்படி அரசு நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை அரை நாள், சனி மற்றும் ஞாயிறு ஆகியவை நாட்டில் புதிய வார இறுதி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு தற்பொழுது நடைமுறையில் இருக்கின்றது.
இதனடிப்படையில் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி ரமலான் மாதத்தில் திங்கள் முதல் வியாழன் வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய அரசு நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திறந்திருக்கும்.
வெள்ளிக்கிழமைகளில், அவை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசு ஊழியர்கள் திங்கள் முதல் வியாழன் வரை மதியம் 2.30 மணி வரையிலும் வெள்ளிக்கிழமை மட்டும் 12 மணி வரையிலும் வேலை செய்ய வேண்டும்.
இஸ்லாமியர்கள் பகலில் உணவு மற்றும் தண்ணீரைத் தவிர்தது நோன்பு இருப்பதால் ரமலான் மாதத்தில் பள்ளி மற்றும் அலுவலகம் செயல்படும் நேரங்கள் குறைக்கப்படுகிறது. வானியல் கணக்கீடுகளின்படி, அமீரகத்தில் ஏப்ரல் 2, 2022 ரமலான் மாதத்தின் முதல் நாளைக் குறிக்கும்.
மேலும் இஸ்லாமிய மாதம் 29 அல்லது 30 நாட்களைக் கொண்டிருக்கும். இந்த வருடம் ரமலான் மாதம் 30 நாட்களைக் கொண்டிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதால் ஈத் அல் ஃபித்ர் மே 2 ம் தேதி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தேதிகள் அனைத்துமே பிறை பார்ப்பதின் அடிப்படையில் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.