ADVERTISEMENT

அமீரகத்தில் நடந்த “உடல் எடை குறைப்பு” சவாலில் 18,000 திர்ஹம் பரிசை வென்ற குடியிருப்பாளர்..!!

Published: 7 Mar 2022, 9:22 AM |
Updated: 7 Mar 2022, 9:22 AM |
Posted By: admin

அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமா சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகத்துடன் இணைந்து RAK மருத்துவமனையால் தொடங்கப்பட்ட மிகப்பெரிய ‘RAK உடல் எடை இழப்பு’ சவாலில் கலந்துகொண்டு தங்களின் எடையை குறைத்த முதல் நான்கு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு RAK மருத்துவமனை பரிசுத்தொகையை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

RAK மருத்துவமையின் இந்த உடல் எடை குறைக்கும் சவாலில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 10 வாரங்களாக தங்கள் உடல் எடையை குறைக்கும் சவாலில் பங்குகொண்டு கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவற்றால் சுமார் ஒரு லட்சம் கிலோ எடையை இழந்துள்ளனர். மேலும் இந்த சவாலில் முதல் நான்கு இடங்களை பிடித்த வெற்றியாளர்கள் மொத்தமாக 126 கிலோ எடையை குறைத்துள்ளனர் எனவும் போட்டி அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இந்த சவாலில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவரும் சராசரியாக 10 கிலோ எடையை குறைத்ததாக போட்டி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அதில் ஆண்கள் பிரிவில் அதிகபட்சமாக ஷார்ஜாவில் வசிக்கும் சிரிய நாட்டைச் சேர்ந்த கஸ்வான் அப்துல்லா டகாக் என்ற குடியிருப்பாளர் தனது மொத்த உடல் எடையில் 36 கிலோ எடையை குறைத்து முதலிடம் பிடித்துள்ளார். மேலும் அவர் முதல் பரிசாக 18,000 திர்ஹம் (இந்திய ரூபாயில் 3.6 லட்சம்) ரொக்கப் பரிசையும் வென்றுள்ளார்.

ADVERTISEMENT

முதலிடம் பிடித்த கஸ்வான் அப்துல்லா கூறுகையில், “போட்டி முடிவுகளைப் பார்ப்பது எனக்கு வலிமையையும், நம்பிக்கையையும், உறுதியையும் தொடர்ந்து ஆரோக்கியமாகவும் இருக்க உறுதி அளித்துள்ளது, எனது உடலளவிலான மாற்றத்தை அனுபவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் நான் முன்பை விட இலகுவாகவும், சுறுசுறுப்பாகவும் உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அதே போன்று பெண்கள் பிரிவில் 31.9 கிலோ எடையை குறைத்து ஹதீல் முகமது அகமது ஹசன் என்பவர் முதல் பரிசை வென்றுள்ளார். அவருக்கு 16,000 திர்ஹம் பரிசாகவும் வழங்கப்பட்டுள்ளது. அவர் கூறுகையில், தொடர்ந்து 10 வாரங்களுக்கு சவாலைப் பின்பற்றுவது எளிதல்ல என்றாலும், தனது உணவு தேர்வுகள் மற்றும் உடற்பயிற்சியில் செய்த மாற்றங்கள் நிரந்தரமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

விர்ச்சுவல் பிரிவில் பங்குபெற்ற போட்டியாளர்களில் சுமார் 27 கிலோ உடல் எடையை குறைத்த மும்பையை சேர்ந்த டாக்டர் பிர்தவ்ஸ் நல்லதாரூ என்பவரும், நான்காவது வெற்றியாளராக 31 கிலோ உடல் எடையை குறைத்த அலா எல்கைடர் என்பவரும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மிகப்பெரிய உடல் எடை இழப்பு சவாலில் 5,655 பங்கேற்பாளர்கள் நேரடியாகவும், 5,289 பேர் விர்ச்சுவல் பிரிவிலும், ஒன்பது அணிகள் கார்ப்பரேட் பிரிவிலும் பதிவு செய்ததாக இப்போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.