கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி அமீரகம், ஓமான் போன்ற நாடுகள் அறிவித்த நிலையில் இதன் தொடர்ச்சியாக தற்பொழுது மற்றொரு வளைகுடா நாடான சவூதி அரேபியாவும் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி சவூதி அரேபியாவிற்கு வரும் பயணிகள் தங்கள் வருகையின் போது PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை எனவும், தனிமைப்படுத்தல் நடைமுறைகள் நீக்கபடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மசூதிகள் சமூக இடைவெளி வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியதில்லை. இருப்பினும், மசூதிகளில் அல்லது உட்புற இடங்களில் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வெளிப்புற இடங்களில் முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எந்த வகையான விசிட் விசாக்களில் சவூதிக்கு வந்தாலும் பயணிகள், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அந்த சிகிச்சைக்கான செலவை ஈடுசெய்யும் மருத்துவ காப்பீட்டைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு சவூதியில் இந்த கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த முடிவுகளானது மார்ச் 5 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.