ஐக்கிய அரபு அமீரகத்தில் புனித ரமலான் மாதம் துவங்க இருக்கின்றது. இந்த ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் பகலில் உணவு மற்றும் தண்ணீரைத் தவிர்த்து நோன்பிருப்பதால் அமீரகத்தில் பள்ளி மற்றும் அலுவலகங்கள் இயங்கும் நேரங்கள் குறைக்கப்படுகின்றன. அமீரகத்தில் இருக்கும் அலுவலகங்கள் அனைத்தும் மதிய வேளையோடு முடிவடையும். இதே போன்று இந்த வருடத்தில் ரமலான் துவங்கவிருப்பதை முன்னிட்டு அமீரகத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தொகுப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் எப்போது?
வானியல் கணக்கீடுகளின்படி, அமீரகத்தில் ஏப்ரல் 2 2022 ரமலான் முதல் நாள் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில் பிறை பார்ப்பதைப் பொறுத்து உண்மையான தேதி தீர்மானிக்கப்படும்.
இஸ்லாமிய மாதங்கள் பிறையைப் பார்ப்பதைப் பொறுத்து 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு, ரமலான் மாதம் மே 1 வரை 30 நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரமலான் மாதத்தில் மாற்றப்படும் வேலை நேரங்கள்?
மத்திய அரசு நிறுவனங்கள் வார நாட்களில் (திங்கள் முதல் வியாழன் வரை) காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திறந்திருக்கும். அரை வேலை நாளான வெள்ளிக்கிழமைகளில், காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இருக்கும். மேலும் வெள்ளிக்கிழமைகளில் கூட்டாட்சி ஊழியர்களுக்கு நெகிழ்வான நேரங்கள் மற்றும் தொலைதூர வேலை விருப்பங்களையும் அரசு அறிவித்துள்ளது.
தனியார் துறைக்கான நேரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பொதுவாகவே ரமலான் மாதங்களில் அனைத்து நிறுவனங்களும் மதியம் வரை மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு நோன்பு நீடிக்கும் காலம் என்னவாக இருக்கும்?
ரமலான் மாதத்தின் தொடக்கத்தில் நோன்பு வைக்ககூடிய நேரங்கள் 13 மணி நேரம் 40 நிமிடங்களாக இருக்கும் என்றும், மாதம் முடியும் நேரத்தில், இது 14 மணி 20 நிமிடங்களாக அதிகரித்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஈத் அல் பித்ர் எப்போது?
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு 2022 இன் இரண்டாவது பொது விடுமுறை ஈத் அல் ஃபித்ர் விடுமுறையாகும். இது பிறை பார்ப்பதைப் பொறுத்து ஐந்து நாட்கள் வரை விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆண்டு, ரமலான் மாதம் மே 1 வரை 30 நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மே 2 இஸ்லாமிய பண்டிகையான ஈத் அல் பித்ரின் முதல் நாளாக இருக்கும் என கூறப்படுகின்றது. இதனடிப்படையில் விடுமுறை நாட்கள் ஏப்ரல் 30 சனிக்கிழமை முதல் மே 4 புதன் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.