துபாயில் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு உதவும் பொருட்டு 7 மில்லியன் திர்ஹம்களை துபாய் சுகாதார ஆணையத்திற்கு (DHA) துபாய் இஸ்லாமிக் பேங்க் வழங்கியுள்ளது. இந்த செயலுக்காக வங்கிக்கு துபாய் சுகாதார ஆணையம் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
DHA இன் டைரக்டர் ஜெனரல் அவாத் சேகயர் அல் கேத்பி, நிதிச் சிக்கல்களை எதிர்கொள்பவர்களின் துன்பத்தைத் தணிக்க முயற்சிகளை மேற்கொள்ளும், குறிப்பாக சுகாதாரத் துறையில் இந்த முயற்சிகளை மேற்கொள்ளும் சமூக உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் துபாய் சுகாதார ஆணையம் சமூகத்தையும் அதன் உறுப்பினர்களையும் ஒருங்கிணைந்த சுகாதாரப் பாதுகாப்புடன் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டு ஆணையம் மேற்கொள்ளும் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சேவைகளை ஆதரிக்க முன்முயற்சி எடுக்கும் அனைத்து பங்காளிகளையும் பாராட்டுவதாகவும் அல் கெட்பி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்: “துபாய் இஸ்லாமிய வங்கி மிக முக்கியமான வங்கிகளில் ஒன்றாகும். இது அமீரகத்தின் பொருளாதாரத்தை ஆதரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் ஆணையத்தையும் வங்கியையும் ஒன்றிணைக்கும் கூட்டாண்மையானது வளரும் சமூகத்திற்கு நேரடியாக சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அல் கெட்பி, துபாய் இஸ்லாமிய வங்கியால் வழங்கப்பட்ட 7.6 மில்லியன் திர்ஹம்களுக்கும் அதிகமான நிதியுதவியானது அதிக பணம் தேவைப்பட்டு பணம் இல்லாமல் கஷ்டப்படும் நோயாளிகளின் சிகிச்சை மற்றும் பராமரிப்புக்காக வழங்கப்படுவதற்காகவும் மற்றும் ஆணையத்துடன் தொடர்புடைய தலசீமியா மையம் (Thalassemia center), புற்று நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஆதரவாகவும் வழங்கப்பட்டுள்ளது என தெரவித்துள்ளார்.
மேலும் DHA இல் உள்ள சுகாதார நிதி அலுவலகத்தின் இயக்குநர் சலீம் கூறுகையில் துபாய் இஸ்லாமிக் வங்கி போன்று சுகாதாரத் துறையில் தொண்டு மற்றும் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதால் நாள்பட்ட நோய்கள் இருந்து சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படும் பல நோயாளிகளுக்கு இது உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் துபாய் இஸ்லாமிக் வங்கியின் நிர்வாகம், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நிதிச் சுமையைக் குறைக்கும் இந்தக் கூட்டாண்மையால் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.