அமீரக அரசானது வரவிருக்கும் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 30 முதல் மே 8 வரை என 9 நாட்கள் விடுமுறையை சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ஷார்ஜா மற்றும் துபாய் ஆகிய இரு எமிரேட்டுகளும் அரசு ஊழியர்களுக்கான விடுமுறை காலத்தை நீட்டித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதற்கு முன்னர் அரசு ஊழியர்களுக்கு இஸ்லாமிய மாதமான ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இது பிறை பார்ப்பதைப் பொறுத்து 4 அல்லது 5 நாட்களாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்பொழுது ஷார்ஜாவில் உள்ள மனிதவளத் துறையின்படி, ஏப்ரல் 30 சனிக்கிழமை முதல் மே 5 வியாழன் வரை ஈத் அல் விடுமுறை இருக்கும் என்றும் ஷார்ஜாவில் வெள்ளி-சனி-ஞாயிறு வார இறுதி நாட்களுடன் இணைந்து, அரசு ஊழியர்கள் ஒன்பது நாட்கள் விடுமுறை பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதே போல் துபாயிலும் அரசு ஊழியர்களுக்கு ஒன்பது நாள் ஈத் அல் பித்ர் விடுமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. துபாய் அரசாங்க மனிதவளத் துறையின்படி, இந்த விடுமுறை நாட்கள் ஏப்ரல் 30 சனிக்கிழமை முதல் மே 8 ஞாயிற்றுக்கிழமை வரை இருக்கும் என்றும் மீண்டும் அதிகாரப்பூர்வ வேலை நாள் மே 9 திங்கட்கிழமை மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமீரகத்தின் தனியார் துறை ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அவர்களுக்கு ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை என 4 அல்லது 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.