அமீரகத்தில் ரமலானை முன்னிட்டு குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பிராந்தியத்தின் ஷாப்பிங், பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்வுகளைப் பார்வையிடும் வாய்ப்பை வழங்கக்கூடிய ரமலான் நைட்ஸ் கண்காட்சியானது ஷார்ஜாவில் நடத்தப்படவுள்ளது.
ஷார்ஜா எக்ஸ்போ சென்டர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் ரமலான் நைட்ஸ் இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் கண்காட்சிகளில் ஒன்றாகும்.
இது ஏப்ரல் 12 முதல் 26 வரை 200 க்கும் மேற்பட்ட முன்னணி சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் 25 சர்வதேச பிராண்டுகளை காட்சிக்கு வைக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
15,000 சதுர மீட்டர் பரப்பளவில், 15 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு, 75 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்கும் பல்வேறு வகையான தயாரிப்புகளைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கண்காட்சியில் கலாச்சார, பாரம்பரியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் இடம்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியானது தினசரி ரேஃபிள் டிராக்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல், முழு குடும்பத்திற்கும் பொருத்தமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளை வழங்கும் கேமிங் அரங்கையும் உள்ளடக்கியுள்ளது.
ஷார்ஜாவின் எக்ஸ்போ சென்டர் CEO சைஃப் முகமது அல் மிட்ஃபா கூறுகையில், “கடந்த ஆண்டுகளில், நாட்டில் நடக்கும் ஷாப்பிங் நிகழ்வுகளில், குறிப்பாக ரமலானின் போது ‘ரமலான் நைட்ஸ்’ கண்காட்சி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
“இந்த கண்காட்சியானது பார்வையாளர்களுக்குத் தேவையான அனைத்தையும் மலிவு விலையில் வழங்குகிறது, மேலும் சிறப்பு சலுகைகள் மற்றும் பரந்த அளவிலான பொருட்கள் மற்றும் பிராண்டுகள் மீதான அற்புதமான தள்ளுபடிகளையும் இது அளிக்கிறது” என கூறியுள்ளார்.
இந்த கண்காட்சியானது மாலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.