அபுதாபி காவல்துறையானது, மோசமான வானிலையின் போது, வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்புகளை நினைவூட்டும் வகையில், புதிதாக ஒளிரும் இ-பேனல்கள் மற்றும் பலகைகளை அபுதாபி முழுவதும் நிறுவியுள்ளது.
மோசமான வானிலையின் போது அபுதாபி காவல்துறையானது வேக வரம்பை குறைக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுவது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும் இத்தகைய பேனல்கள், பலகைகள் வைக்கும் போது மூடுபனி, மணல் புயல் போன்ற மோசமான சூழ்நிலையிலும் வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்பை தெரியப்படுத்தவும் எச்சரிக்கை விடுக்கவும் இவை மிக பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அபுதாபி காவல்துறையின் அறிக்கையின்படி, மழை, பலத்த காற்று, மணல் புயல் மற்றும் கடுமையான மூடுபனி ஆகியவற்றின் போது 80 கிமீ / மணி வேக வரம்பு அடையாளங்கள் இயக்கப்படும் என்று அபுதாபி காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மோசமான கால நிலைகளின் போது வாகன ஓட்டிகள் வேக வரம்புகளை கடைபிடிக்குமாறும், வானிலை முன்னறிவிப்புகளை தவறாமல் பின்பற்றுமாறும், உரிய தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.