அமீரக செய்திகள்

அமீரகத்தில் பிறக்கும் வெளிநாட்டினர் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய வெளிநாட்டினை சேர்ந்த குடியிருப்பாளர்கள் அமீரகத்திலேயே குழந்தையைப் பெற்றெடுத்தால், அந்த குழந்தையின் பிறப்புச் சான்றிதழை பெறுவதற்கு விண்ணப்பிப்பது எப்படி..?? அதற்கான வழிமுறைகள் என்ன..?? கட்டணம் எவ்வளவு..?? போன்ற தகவல்களை இங்கே காண்போம்.

மின்னணு பிறப்பு அறிவிப்பு

அமீரகத்தை பொறுத்தவரை இங்குள்ள மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறந்தவுடன், மருத்துவமனை அக்குழந்தையின் பெற்றோருக்கு பிறப்பு அறிவிப்பை வெளியிடும். இந்த பிறப்பு அறிவிப்பானது மின்னணு முறையில் மருத்துவமனை நிர்வாகத் துறையால் அனுப்பப்படும். அதில் அமீரகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் பிறப்பு அறிவிப்பு எண் எனப்படும் கைட் எண் (Qaid number) குறிப்பிடப்பட்டிருக்கும்.

விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் என்ன?

பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழை பெறுவதற்கு உண்டான செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், பின்வரும் ஆவணங்களின் டிஜிட்டல் நகல் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்: அவை,

• குழந்தை பிறந்த மருத்துவமனையிலிருந்து பிறப்பு பற்றிய மின்னணு அறிவிப்பு
• பெற்றோரின் சான்றளிக்கப்பட்ட திருமணச் சான்றிதழ்
• பெற்றோரின் பாஸ்போர்ட் நகல்
• பெற்றோரின் எமிரேட்ஸ் ஐடிகள்

பிறப்புச் சான்றிதழுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

1. முதலில் https://mohap.gov.ae/en/services/issue-of-a-birth-certificate என்ற இணையதள லிங்கில் செல்ல வேண்டும்.
2. ‘சேவையைத் தொடங்கு’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. உங்கள் UAEPass ஐப் பயன்படுத்தி உள்நுழையவும். உங்களிடம் UAEPass இல்லையென்றால், மின்னஞ்சல் முகவரி மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை வழங்குவதன் மூலம் MOHAP இல் கணக்கை உருவாக்க வேண்டும்.
4. கணக்கு தொடங்கப்பட்டதும் முகப்பில் இருக்கும் ‘பிறப்புச் சான்றிதழ்கள்’ என்பதைக் கிளிக் செய்து கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ‘பிறப்புச் சான்றிதழை வழங்கு’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. Qaid எண் மற்றும் தந்தை மற்றும் தாயின் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.
6. பிறந்த குழந்தையின் பெயர் மற்றும் பெற்றோரின் விபரங்களை உள்ளிட்ட வேண்டும்.
7. பின்னர் பிறப்புச் சான்றிதழுக்கு 65 திர்ஹம்ஸ் பணம் செலுத்த வேண்டும். பொதுவாக சான்றிதழ் அரபு மொழியில் வழங்கப்படும். ஆங்கிலச் சான்றிதழை நீங்கள் பெற விரும்பினால் அதைக் கோரிக்கையாகச் சேர்க்கலாம் மேலும் அதற்கு நீங்கள் கூடுதலாக 65 திர்ஹம் என மொத்தமாக 130 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும்.
8. அதன் பிறகு பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கான முகவரியை உள்ளிட வேண்டும்.
9. MOHAP இன் படி, பிறப்புச் சான்றிதழ் இரண்டு வேலை நாட்களுக்குள் விண்ணப்பித்தவரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!