அமீரக செய்திகள்

அமீரகத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அபுதாபி இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான்..!!

அமீரகத்தின் ஜனாதிபதியாக பதவி வகித்த மாண்புமிகு ஷேக் கலீஃபா அவர்கள் வெள்ளிக்கிழமை மரணமடைந்ததை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அடுத்த அதிபராக அபுதாபி இளவரசர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் பதவியேற்பார் என்று பெடரல் சுப்ரீம் கவுன்சில் சனிக்கிழமை (இன்று) அறிவித்துள்ளது.

61 வயதான ஷேக் முகம்மது அவர்கள், மே 13 அன்று தனது 73 வயதில் காலமான அவரது சகோதரர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்குப் பிறகு, நாட்டின் மூன்றாவது ஜனாதிபதியாக இருப்பார் என கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 2004 முதல் அபுதாபியின் பட்டத்து இளவரசராக பணியாற்றிய ஷேக் முகமது பின் சயீத் அவர்கள், அபுதாபியின் 17வது ஆட்சியாளராகவும் தொடர்ந்து இருப்பார் என கூறப்படுகிறது. அமீரக அரசு செய்தி நிறுவனம்  வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அபுதாபியில் உள்ள அல் முஷ்ரிஃப் அரண்மனையில் கூட்டாட்சி உச்ச கவுன்சில் கூடியது மற்றும் அந்த கூட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அதிபராக ஷேக் முகமது பின் சயீத் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய ஜனாதிபதி மறுதேர்தலுக்கு தகுதி பெறுவதற்கு முன் ஐந்தாண்டு காலத்திற்கு பதவியில் இருப்பார் என கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

அமீரகத்தின் அதிபராக தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் முகமது பின் சையத் அவர்கள் ஜனவரி 2005 முதல் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியாகவும் பணியாற்றினார். அமீரக ஆயுதப் படைகளை வியூகத் திட்டமிடல், பயிற்சி, நிறுவன அமைப்பு மற்றும் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியதற்காக அவர் அறியப்பட்டவர். அவரது தலைமையின் கீழ், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகள் சர்வதேச ராணுவ அமைப்புகளால் பெரிதும் போற்றப்படும் ஒரு முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

மேலும் அமீரக அதிபராக அபுதாபி இளவரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஸ்தாபகத் தந்தையான ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானின் மரபைக் கடைப்பிடித்த மறைந்த ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் வகுத்த கொள்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபெடரல் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் தங்கள் ஆர்வத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மறைந்த ஆட்சியாளர்களின் பங்களிப்புகள் ஐக்கிய அரபு அமீரகம் பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகத்தை ஆட்சி செய்த ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இறந்ததைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் வெள்ளிக்கிழமை முதல் 40 நாட்கள் துக்கத்தை அனுசரிக்க தொடங்கியுள்ளது.  அத்துடன் சனிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டு, மே 17 செவ்வாய் அன்று வேலை மீண்டும் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!