அமீரக செய்திகள்

அமீரக அதிபர் மறைவு.. தனியார் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் மூன்று நாள் விடுமுறை.. 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியும் அபுதாபியின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (மே 13) மறைந்ததை அடுத்து, அவர்களின் மறைவுக்காக இன்று முதல் 40 நாட்களுக்கு அமீரகம் முழுவதும் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படும் என ஜனாதிபதி விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் மறைந்த அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபா அவர்களின் மறைவையொட்டி அமீரகத்தில் இருக்கும் அமைச்சகங்கள், அரசுத்துறைகள், மத்திய நிறுவனங்கள், உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜனாதிபதி விவகார அமைச்சகம் அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபாவின் மரணத்தை அறிவித்தது. அதில் “நாட்டின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு ஜனாதிபதி விவகார அமைச்சகம் இரங்கல் தெரிவிக்கிறது.” என கூறப்பட்டுள்ளது.

மாண்புமிகு ஷேக் கலீஃபா அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது ஜனாதிபதியாகவும், அபுதாபி எமிரேட்டின் 16 வது ஆட்சியாளராகவும் இருந்துள்ளார். அவர் தனது தந்தை மாண்புமிகு  ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் நவம்பர் 2, 2004 அன்று காலமானதைத் தொடர்நது  நவம்பர் 3, 2004 அன்று அபுதாபியின் ஆட்சியாளராக பொறுப்பேற்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியாக கூட்டாட்சி அரசியலமைப்பு அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு இன்று வரை பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!