அமீரக செய்திகள்

UAE: உலகளவில் பரவும் குரங்கு அம்மை நோய்.. பரவலை கையாள தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சகம் அறிக்கை..!!

உலக நாடுகளிடையே தற்போது புதிதாக குரங்கு அம்மை எனும் மங்கிபாக்ஸ் நோய் பரவி வரும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) எந்தவொரு சந்தேகத்திற்கிடமான வழக்குகளையும் முன்கூட்டியே விசாரித்து அந்த நோயின் தாக்கம் குறித்து நெருக்கமாகக் கண்காணித்து வருவதாக அமீரகத்தின் மாநில செய்தி நிறுவனம் Wam இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

தற்போது உள்நாட்டில் நோயின் தீவிரத்தை ஆய்வு செய்து மதிப்பீடு செய்து வருவதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சகம், நோயாளிகளிடையே நோயின் அறிகுறிகளைக் கண்காணிக்க மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டுள்ளது. மேலும் சந்தேகத்திற்கிடமான வழக்குகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வசதிகள் இருப்பதாகவும், நோயை ஏற்படுத்தும் வைரஸின் பரவலை கையாள அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

குரங்கு அம்மை நோய் பரவல் குறித்து அமைச்சகம் கூறும் போது, “சந்தேகப்பட்ட நோயாளிகளைக் கண்டறிவதற்கான துல்லியமான வழிமுறைகளை நாங்கள் அமைத்துள்ளோம். தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, கண்காணிப்பு, நோயை முன்கூட்டியே கண்டறிதல், மருத்துவ ரீதியாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மேலாண்மை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான விரிவான வழிகாட்டியையும் தயார் செய்துள்ளது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கூறும் போது, உலகளவில் குரங்கு அம்மை நோயின் பரவலை சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அமீரகத்தில் உள்ள பிற சுகாதார நிறுவனங்களுடன் இணைந்து நாட்டிற்குள் தொற்றுநோயியல் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் இந்த நோய் குறித்த வதந்திகளை விளம்பரப்படுத்த வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறுமாறும் அமைச்சகம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குரங்கு அம்மை நோய் என்பது ஒரு வைரஸ் ஜூனோடிக் நோயாகும், இது பொதுவாக மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் இருந்து பரவுவதாகவும், அங்கிருந்தே மற்ற நாடுகளுக்கு பரவுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் அல்லது நோய் பாதித்த விலங்குடன் நெருங்கிய தொடர்பு மூலம் அல்லது வைரஸால் மாசுபட்ட பொருட்களின் மூலமும் இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது எனவும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!