அமீரக செய்திகள்இந்திய செய்திகள்

அமீரகத்திற்கு வருகைத்தந்த மோடியை கட்டியணைத்து வரவேற்ற அதிபர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யான்..!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகைத்தந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாண்புமிகு அதிபர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யானை சந்தித்துப் பேசியுள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற மோடி நேரடியாக அமீரகம் வந்தடைந்தார். பிரதமர் மோடியை அபுதாபி விமான நிலையத்திற்கு நேரடியாகச் சென்று அதிபர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யான் வரவேற்றார்.

அமீரகத்தின் முன்னாள் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஜயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு மோடி இரங்கல் தெரிவித்தார். ஷேக் கலீஃபா தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர் எனப் பாராட்டிய பிரதமர் மோடி, அவரது தலைமையின் கீழ் இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவு வளர்ச்சியை அடைந்ததாகத் தெரிவித்தார்.

இதனை அடுத்து அவரது மறைவுக்குப் பிறகு புதிய அதிபராக ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யான் பொறுப்பேற்றார். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் விவாதித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் அமீரகத்தில் உள்ள இந்தியர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக அந்நாட்டு அதிபருக்குப் மோடி நன்றி தெரிவித்தார். இந்தியாவுக்குக் கூடிய விரைவில் வருகை தர வேண்டுமெனவும் அதிபர் ஷேக் முகமதுக்கு அவர் அழைப்பு விடுத்தார். பின்னர் அமீரகத்தின் பயணத்தை முடித்துக் கொண்டு மோடி செவ்வாய்க்கிழமையான நேற்று இரவு நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!