அமீரக செய்திகள்

அமீரகத்தில் மேலும் புதிதாக 4 பேருக்கு மங்கிபாக்ஸ் தொற்று உறுதி..!! சுகாதார அமைச்சகம் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு புதிய மங்கிபாக்ஸ் நோய்த்தொற்று பதிவாகியுள்ளன என்று அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தொற்றுநோயியல் கண்காணிப்பு அமைப்பின் ஒரு பகுதியாக இந்த பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் கண்டறியப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை எட்டாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் முதல் நோய்த்தொற்று கடந்த மே 24 ம் தேதி கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலும் 3 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் தற்பொழுது புதிதாக நான்கு பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) அனைத்து பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டியுள்ளது. 

மேலும் மக்கள் பயணம் செய்யும் போது அல்லது அவர்கள் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார அதிகாரிகள் விசாரணை, தொடர்புகளை பரிசோதித்தல் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை கண்காணித்தல் உட்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்துள்ளனர்.  

அத்துடன் மங்கிபாக்ஸ் எனும் குரங்கு அம்மை நோய் தொற்றக்கூடியதுதான் என்றாலும் கொரோனா உடன் ஒப்பிடும்போது அதன் பரவல் குறைவாகவே இருக்கும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. இது பெரும்பாலும் உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் அல்லது வைரஸால் மாசுபட்ட பொருட்களுடன் பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் நெருங்கிய தொடர்பு மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் அனுப்பப்படலாம், என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், மங்கிபாக்ஸ் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் வரை மருத்துவமனைகளில் முழுமையாக தனிமைப்படுத்துவது, அவர்களின் நெருங்கிய தொடர்புகளை 21 நாட்களுக்கு குறையாமல் வீட்டில் தனிமைப்படுத்தி அவர்களின் உடல்நிலையை கண்காணிப்பது உட்பட மங்கிபாக்ஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளைக் கையாள்வதற்கான ஒருங்கிணைந்த தேசிய மருத்துவ வழிகாட்டுதலுக்கு நாட்டில் உள்ள அனைத்து சுகாதார அதிகாரிகளும் உறுதிபூண்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!