அமீரக செய்திகள்

UAE: சிம் கார்டை வேறு நபர்களுக்கு வழங்கும் குடியிருப்பாளரா நீங்கள்..?? எச்சரிக்கை விடுத்த சைபர் கிரைம் நிபுணர்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் பெயரில் வாங்கிய சிம் கார்டுகளை வேறு நபர்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறும், அந்த மொபைல் நம்பர் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தால் அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அமீரகத்தின் சைபர் கிரைம் நிபுணர்கள் அமீரக குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளனர்.

ஷார்ஜா பப்ளிக் ப்ராசிகியூஷனில் உள்ள சைபர் கிரைம் நிபுணர் ஒருவர் கூறுகையில், சிம் கார்டு பதியப்பட்ட உரிமையாளருக்குத் தெரியாமல், அந்த சிம் கார்டை பயன்படுத்தி வேறு நபர்களுக்கு எதிராக குற்றம் செய்த பல சம்பவங்கள் அமீரகத்தில் நடந்துள்ளதாகவும், இதனால் குடியிருப்பாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், குடியிருப்பாளர்கள் சிம் கார்டுகளை வாங்கி மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடாது. அந்த சிம் கார்ட் எண்ணைப் பயன்படுத்தி அமீரகத்தில் ஏதேனும் குற்றம் நடந்தால், அதற்கான குற்ற வழக்கு அந்த சிம் கார்ட் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த நபருக்கே திருப்பி அனுப்பப்படும். இவ்வாறான சூழலில் அந்த சிம் கார்டை வேறு யாரோ பயன்படுத்தினார்கள் என்பதை நிரூபிக்க நிரபராதிக்கு நேரம் ஆகலாம் என்றும் அந்த அதிகாரி விளக்கியுள்ளார்.

அமீரகத்தில் பணிபுரிந்து வந்த, தலைமறைவான பணிப்பெண் ஒருவர் தான் வேலை செய்த குடும்பத்தின் தனிப்பட்ட வீடியோ கிளிப்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டது தொடர்பாக ஒரு குற்ற வழக்கு பதியப்பட்ட சம்பவத்தையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். அது குறித்து விவரிக்கையில், அந்த பணிப்பெண் வீடியோ பதிவிட்ட சமூக ஊடக கணக்குடன் தொடர்புடைய மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பணிப்பெண்ணைக் கண்காணிக்க போலீஸார் முயன்றனர். இருப்பினும், அந்த மொபைல் எண் மற்றொரு வீட்டில் பணிபுரியும் உதவியாளருக்கு சொந்தமானது, இது விசாரணைக்கு இடையூறாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், குடியிருப்பாளர்களை குறிவைத்து பல்வேறு சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் மோசடி கும்பல்களுக்கு எதிராக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், முன்பின் தெரியாத நபர்களுடன் தங்களின் சொந்த விபரங்களை பகிர்வதை தவிர்க்கவும் அமீரக காவல்துறையினரும் பொதுமக்களை தொடர்ந்து அறிவுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!