வளைகுடா செய்திகள்

ஓமனில் கனமழை காரணமாக வெள்ளத்தில் தவித்த நூற்றுக்கணக்கானோர்.. ஹெலிகாப்டர் மூலம் மீட்ட சிவில் பாதுகாப்பு குழுவினர்..!

அமீரகம், ஓமன் மற்றும் அதன் அண்டை நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஓமனில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 105 குடிமக்கள் மற்றும் 32 வெளிநாட்டினர் உட்பட 137 பேரை சிவில் பாதுகாப்பு ஆணையம் ஹெலிகாப்டர் மூலம் மீட்டது.

முன்னதாக ஓமன் அல் ஹஜர் அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். வெள்ளம் காரணமாக தோஃபர் கவர்னரேட்டில் உள்ள ஐன் கோர் பகுதிக்கு செல்லும் சாலையை ஓமன் காவல்துறை தற்காலிகமாக மூடியுள்ளது. தோஃபர் கவர்னரேட்டிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பைப் உறுதிப்படுத்தவும், ஐன் கோர் சுற்றுலாப் பகுதியில் அதிக நீர் மட்டத்தைக் கருத்தில் கொண்டும், ராயல் ஓமன் காவல்துறை அப்பகுதிக்கு செல்லும் சாலையை தற்காலிகமாக மூடியுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களில் ஓமனில் அதிகபட்சமாக 320 மி.மீ மழை பதிவாகியுள்ளததாக விவசாயம், மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. கசாப் 150 மி.மீ, திப்பாவில் 82 மி.மீ, பர்காவின் விலாயத் 65 மி.மீ மற்றும் ரஸ்தாக் 65 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இந்த கனமழையால் பாதிக்கப்பட்ட சேவைகளை மீட்டெடுக்க அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சாலைகளில் உள்ள குப்பைகள் மற்றும் பாறைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மின்சாரம், தகவல் தொடர்பு, நீர், சுகாதாரம், எரிபொருள் மற்றும் கழிவு மேலாண்மை போன்ற அடிப்படை சேவைகளுக்கான குழுக்கள் இயல்பு நிலையை மீட்டெடுக்க முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.

ஓமன் ராயல் ஏர் ஃபோர்ஸ் மற்றும் ராயல் ஓமன் போலீஸ் இணைந்து, முசாண்டம் கவர்னரேட்டில் உள்ள மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு செல்ல ஹெலிகாப்டர்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் நிறுவனங்கள் பல மொபைல் கோபுரங்கள் இடிந்து விழுந்ததையடுத்து முசந்தம் மற்றும் வடக்கு அல் பாட்டினாவில் பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

Related Articles

Back to top button
error: Content is protected !!