Uncategorized

UAE: இந்த விசாவிற்கு ஸ்பான்சர் தேவையில்லை.. 90 நாட்கள் தொடர்ந்து தங்கலாம்.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விசா விதிகள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் நுழைவு விசா விதிமுறைகளில் மாற்றங்களை மேற்கொண்டு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஒரு புதிய நுழைவு அமைப்பு ஒன்றை அமீரக அரசு அறிவித்துள்ளது. அமீரகத்திற்கு வெவ்வேறு நோக்கங்களுக்காக வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு வகையான விசா வகைகள் இந்த புதிய நுழைவு அமைப்பின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதன் முறையாக குறிப்பிட்ட விசாவில் அமீரகம் வர ஸ்பான்சர் தேவையில்லை என்பது உட்பட, அனைத்து விசா வகைகளுக்கான நுழைவுத் தேவைகளை எளிதாக்குதல் மற்றும் பார்வையாளர்களின் தேவைகள் மற்றும் வருகையின் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் நெகிழ்வான விசா காலங்களை வழங்குதல் ஆகியவை இந்த முக்கிய மேம்பாடுகளில் அடங்கும்.

கூடுதலாக, அனைத்து நுழைவு விசாக்களும் ஒரு முறை அல்லது பல நுழைவுகளுக்கு கிடைக்கும் என்றும், மேலும் அவை ஒரே மாதிரியான காலத்திற்கு அதாவது 90 நாட்கள் விசா மேலும் 90 நாட்களுக்கு புதுப்பிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுளளது. மேலும் நுழைவு விசாக்கள் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட விசாக்களின் பட்டியல் கீழே உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் அவற்றில் சில ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:

வேலை விசா (Job Visa)

ஐக்கிய அரபு அமீரகத்தில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளை ஆராய இளம் திறமையாளர்கள் மற்றும் திறமையான நிபுணர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்த புதிய “வேலை விசா” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின்படி முதல் அல்லது இரண்டாவது அல்லது மூன்றாவது திறன் மட்டத்தில் வகைப்படுத்தப்பட்டவர்களுக்கும், உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களின் புதிய பட்டதாரிகளுக்கும் இந்த விசா வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தபட்ச கல்வி நிலையானது இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமானதாக இருக்க வேண்டும்.

பிசினெஸ் விசா

ஐக்கிய அரபு அமீரகத்தில் வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய முதலீட்டாளர்களையும் தொழில்முனைவோரையும் ஊக்குவிக்க இந்த புதிய விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விசாவில் அமீரகம் வர ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா விசா (Tourist Visa)

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் வழக்கமான சுற்றுலா விசாவிற்கு கூடுதலாக, ஐந்தாண்டு பல நுழைவு சுற்றுலா விசாவும் (five year multi entry tourist visa) அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை விசாவில் வரும் சுற்றுலா வாசிகளுக்கு ஸ்பான்சர் தேவையில்லை.

ஐந்தாண்டு பல நுழைவு சுற்றுலா விசாவானது, ஒரு நபரை 90 தொடர்ச்சியான நாட்கள் வரை அமீரகத்தில் தங்க அனுமதிக்கிறது, மேலும் இது ஒரு வருடத்தில் 180 நாட்களுக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் நீட்டிக்கப்படலாம். இந்த விசாவிற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன் கடந்த ஆறு மாதங்களில் $4,000 வங்கி இருப்பு அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு நாணயங்கள் இருப்பதற்கான ஆதாரம் தேவை.

உறவினர்கள் அல்லது நண்பர்களைப் பார்க்க நுழைவதற்கான அனுமதி

ஒரு பார்வையாளர் ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் அல்லது குடியிருப்பாளரின் உறவினர் அல்லது நண்பராக இருந்தால், இந்த நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கும் ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் தேவையில்லை.

தற்காலிக பணி (Temporary Work)

இந்த வகை விசாவானது திட்ட அடிப்படையிலான தற்காலிக பணி ஒதுக்கீட்டைக் கொண்டிருப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது முதலாளியால் ஸ்பான்சர் செய்யப்படுகிறது. இதற்கு ஒரு தற்காலிக வேலை ஒப்பந்தம் அல்லது வருகையின் நோக்கத்தை தெளிவுபடுத்தும் முதலாளியிடமிருந்து ஒரு கடிதம் தேவை. மேலும் இந்த வகை விசாவில் அமீரகத்திற்கு வருபவர்களுக்கு வேலை செய்வதற்கான உடல் தகுதிக்கான மெடிக்கல் பிட்னெஸ் சான்று தேவை.

படிப்பு அல்லது பயிற்சி (Studies or Training)

இந்த வகை விசாவானது பயிற்சி மற்றும் படிப்புகள் அல்லது இன்டர்ன்ஷிப் திட்டங்களில் பங்கேற்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பான்சர் வழங்குபவர்கள் அரசு நிறுவனம் அல்லது தனியார் நிறுவனம் அல்லது அமீரகத்தில் உரிமம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களாக இருக்கலாம். மேலும் படிப்பு அல்லது பயிற்சி அல்லது இன்டர்ன்ஷிப் திட்டத்தின் விவரங்களையும் அதன் கால அளவையும் தெளிவுபடுத்தும் கடிதத்தை ஸ்பான்சர் வழங்க வேண்டும்.

குடும்ப விசா (family visa)

அமீரகத்தில் வசிக்கக்கூடிய வெளிநாட்டவர்கள் செப்டம்பர் முதல் தங்களின் ஆண் பிள்ளைகளுக்கு 25 வயது வரையிலும் ரெசிடென்ஸ் விசா ஸ்பான்சர் செய்ய முடியும். இதற்கு முன்னதாக அமீரகத்தில் ஒரு வெளிநாட்டவர் தனது ஆண் குழந்தைக்கு 18 வயது வரை மட்டுமே ஸ்பான்சர் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

மேலும், பெண் குழந்தைகளை பொறுத்தவரை இனி வெளிநாட்டை சேர்ந்த பெற்றோர்கள் தங்களின் திருமணமாகாத பிள்ளைகளுக்கு கால வரம்பின்றி அமீரகத்தில் தங்குவதற்கான ரெசிடென்ஸ் விசா ஸ்பான்சர் செய்யலாம். அதே நேரத்தில் உடல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் அவர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் வரம்பற்ற காலத்திற்கு ரெசிடென்ஸ் விசா வழங்கப்படும்.

கிரீன் விசா (green visa)

இந்த ஐந்தாண்டு விசா வைத்திருப்பவர்கள் தங்கள் குடும்பங்களை ஸ்பான்சர் அல்லது முதலாளி இல்லாமல் அழைத்து வர அனுமதிக்கிறது. இந்த விசா திறமையான தொழிலாளர்கள், சுய-தொழில் செய்பவர்கள், ஃப்ரீலான்ஸர்கள் போன்றவர்களுக்கு கிடைக்கிறது. பிற தேவைகளில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான மற்றும் குறைந்தபட்ச சம்பளம் 15,000 திர்ஹம்ஸாக இருத்தல் வேண்டும்

கோல்டன் விசாக்கள் (golden visas)

ஐக்கிய அரபு அமீரகம், நீண்ட கால அடிப்படையில் நாட்டின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்க விரும்பும் பல தொழில்முறை பிரிவுகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கோல்டன் விசாவை அறிவித்துள்ளது. வெவ்வேறு பிரிவுகளுக்கான கோல்டன் விசாக்களின் பட்டியல் கீழேபொடுக்கப்பட்டுள்ளன. அவை:

ரியல் எஸ்டேட்: விசாவிற்கான தகுதிபெற, ரியல் எஸ்டேட்டில் குறைந்தபட்சம் 2 மில்லியன் திர்ஹம் முதலீடு தேவை. அடமானம் மற்றும் ஆஃப்-பிளான் சொத்துக்களில் சொத்து வாங்கும் முதலீட்டாளர்கள், அவர்களின் மொத்த முதலீடு 2 மில்லியன் திர்ஹம் அல்லது அதற்கு மேல் இருந்தால் அனுமதிக்கப்படும்.

ஸ்டார்ட்அப்: தொழில்முனைவோர் இப்போது கோல்டன் விசாவை மூன்று வகைகளின் கீழ் பெறலாம் – (1) ஸ்டார்ட்அப் நாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், (2) SME கீழ் வர வேண்டும், (3) மற்றும் ஆண்டு வருமானம் 1 மில்லியன் திர்ஹம் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

விஞ்ஞானிகள்: எமிரேட்ஸ் சயின்ஸ் கவுன்சிலின் பரிந்துரை மற்றும் வாழ்க்கை அறிவியல், இயற்கை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் போன்றவற்றில் ஒரு உயர் பல்கலைக்கழகத்தில் இருந்து PhD அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

குறிப்பிட்ட துறையில் திறமை: கலை, கலாச்சாரம், டிஜிட்டல் தொழில்நுட்பம், விளையாட்டு, புத்தாக்கம், மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற துறைகளில் சிறப்பான திறமை உள்ளவர்கள் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு நிறுவனத்திடம் இருந்து பரிந்துரை கடிதம் அல்லது ஒப்புதல் தேவை.

திறமையான தொழிலாளர்கள்: விண்ணப்பதாரர் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், சரியான வேலை ஒப்பந்தம், மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் வரையறுத்துள்ள தொழில் நிலை ஒன்று அல்லது இரண்டின் கீழ் வர வேண்டும் மற்றும் குறைந்தபட்ச மாத சம்பளம் 30,000 திர்ஹம்ஸாக இருக்க வேண்டும்.

மாணவர்கள்: அமீரக மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற அல்லது உலகளவில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் கீழ் வருபவர்கள் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!