Uncategorized

UAE: செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ரெசிடென்ஸ் விசா விதிகளில் மாற்றங்கள் என்னென்ன..??

ஐக்கிய அரபு அமீரக அரசானது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த விசா விதிகளில் மாற்றம் செய்து புதிய விசா வகைகளை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியிருந்தது. அவற்றில் சில புதிய மாற்றங்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் அமீரகம் எங்கும் நடைமுறைக்கு வரவுள்ளது. அது பற்றிய சிறு தொகுப்பை இங்கே கீழே காணலாம்.

அமீரக அரசு அறிவித்திருந்த புதிய விசா விதிகளின் கீழ், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய வெளிநாட்டவர்கள் செப்டம்பர் முதல் தங்களின் ஆண் பிள்ளைகளுக்கு 25 வயது வரையிலும் ரெசிடென்ஸ் விசா ஸ்பான்சர் செய்ய முடியும். இதற்கு முன்னதாக அமீரகத்தில் ஒரு வெளிநாட்டவர் தனது ஆண் குழந்தைக்கு 18 வயது வரை மட்டுமே ஸ்பான்சர் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

மேலும், பெண் குழந்தைகளை பொறுத்தவரை இனி வெளிநாட்டை சேர்ந்த பெற்றோர்கள் தங்களின் திருமணமாகாத பிள்ளைகளுக்கு வரம்பற்ற காலத்திற்கு அமீரகத்தில் தங்குவதற்கான ரெசிடென்ஸ் விசா ஸ்பான்சர் செய்யலாம். அதே நேரத்தில் உடல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் அவர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் வரம்பற்ற காலத்திற்கு ரெசிடென்ஸ் விசா வழங்கப்படும்.

அமீரகத்தை பொறுத்தவரை ரெசிடென்ஸ் விசா பெறுவதற்கு 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் மற்றும் பெண் குடும்ப உறுப்பினர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையங்களில் மருத்துவ உடற்தகுதி பரிசோதனை செய்து தேர்ச்சி பெற வேண்டும். மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்களுக்கு ரெசிடென்ஸ் விசா வழங்கப்படாது.

மேலும் அமீரக ரெசிடென்ஸ் விசா பெற விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர், நுழைவு அனுமதியின் (Entry Permit) கீழ் ஐக்கிய அரபு அமீரகம் நுழைந்த பிறகு ரெசிடென்ஸ் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்காக அவரின் ஸ்பான்சருக்கு 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!