Uncategorized

UAE: 13-வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய 5 வயது சிறுவன்..!!

ஷார்ஜாவில் உள்ள, அல் தாவுன் எனும் பகுதியில் இருக்கும், அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றின், 13 வது மாடியில் ஜன்னலுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்த, 5 வயது குழந்தையை, அக்கம்பக்கத்தினர் மற்றும் வாட்ச்மேன் காப்பாற்றிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

அப்பகுதியில் இருக்கக்கூடிய கட்டிடத்தின் 13 வது மாடியில், குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஜன்னலின் வெளியே சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. அப்போது அந்த பகுதியில் வசிக்கும் அதெல் அப்துல் ஹபீஸ் என்பவர் வேலை முடிந்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, பிளாட்டிற்கு வெளியே ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக அந்த கட்டிடத்தின் வாட்ச்மேனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு. 13வது மாடிக்கு உடனடியாக சென்று ஜன்னலில் தொங்கிக்கொண்டிருந்த அந்த குழந்தையை இருவரும் காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அப்துல் ஹபீஸ் கூறும்போது: “ஜன்னலில் தொங்கி கொண்டிருந்த குழந்தை இருக்கும் பிளாட்டிற்கு சென்று கதவை தட்டியதாகவும், ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். பின்னர் உடனடியாக அந்த குழந்தையின் தந்தைக்கு கால் செய்து, சம்பவத்தை எடுத்து கூறி, கதவை உடைத்து உள்ளே நுழைந்து குழந்தையை காப்பாற்ற அனுமதி கேட்டதாக கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும்போது, அந்த குழந்தை ஜன்னலின் ஓரத்தை மிகவும் சிரமத்துடன் பிடித்து கொண்டு, கால் விரல் நுனியில் நின்று கொண்டு இருந்ததாக தெரிவித்துள்ளார். உடனே அந்த குழந்தையின் கைகளைப் பிடித்து, வாட்ச்மன் உதவியுடன் பத்திரமாக மீட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அந்த கட்டிடத்தின் வாட்ச்மன் கூறுகையில், குழந்தை ஜன்னலில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குழந்தை விழுந்தால் அக்குழந்தையை காப்பாற்ற போர்வை மற்றும் மெத்தையுடன் கீழே தயாராக இருக்கும்படி அக்கம்பக்கத்தினரிடம் கூறியதாகவும், பின்னர் 13 வது மாடிக்கு சென்று கதவை உடைத்து குழந்தையை காப்பாற்றியதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசிற்கு தகவல் அளித்த நிலையில், அக்குழந்தையை மீட்க 6 போலீஸ் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களுடன் மீட்பு குழுவினர்கள் அங்கு வந்ததாகவும், எனினும் அவர்கள் வருவதற்கு முன்பே அக்குழந்தையை பத்திரமாக காப்பாற்றிவிட்டனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தின் போது அக்குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லை என்பதும், இதனை அறிந்து அவர்கள் வரும் முன்னரே அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஜன்னலுக்கு வெளியே குழந்தை தொங்கி கொண்டிருப்பதை நேரில் கண்டதும், சற்றும் தயங்காமல் துரிதமாக செயல்பட்டு, கதவை உடைத்து அந்த குழந்தையை பத்திரமாக மீட்ட அதெல் அப்துல் ஹபீஸ் மற்றும் வாட்ச்மன் ஆகிய இருவரையும், அந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் ஷார்ஜா காவல்துறையினர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!