மிகப்பெரிய மின்வெட்டு பிரச்சனையை சந்தித்த ஓமான்.. டிராஃபிக் சிக்னல், பள்ளி, அலுவலகங்களின் செயல்பாடுகள் முடக்கம்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!

ஓமானில் திங்களன்று மஸ்கட் மற்றும் வேறு சில கவர்னரேட்டுகளில் பெரும் மின்வெட்டு ஏற்பட்டு, சில மணி நேரங்களில் கிட்டத்தட்ட அனைத்தும் முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகளில் வேலைகள் திடீரென நிறுத்தப்பட்டன. மின்சாரம் பாதிக்கப்பட்ட கவர்னரேட்டுகளில் மஸ்கட்டுடன் சேர்த்து நார்த் அல் பதீனா, சவுத் அல் பதீனா, நார்த் அல் ஷர்கியா, சவுத் அல் ஷர்கியா, அல் தகிலியா ஆகிய பகுதிகள் அடங்கும்.
மதியம் 1.30 மணிக்கு ஏற்பட்ட இந்த மின்வெட்டானது கிட்டத்தட்ட மூன்று, நான்கு மணி நேரங்களுக்கு நீடித்துள்ளது. பின்னர் படிப்படியாக இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளது.
நீண்ட மணிநேரம் மின்சாரம் தடைபட்டதால், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கடுமையான கோடை வெப்பத்தில் வீடுகளிலும் சாலைகளிலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பரபரப்பான சந்திப்புகளில் நீண்ட வரிசையில் கார்கள் இருந்ததால், போக்குவரத்து நெரிசலில் இருந்து வெளியேறுவதற்கு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதற்கு டிராஃபிக் லைட் செயல்படாததே காரணமாகும். இதனால் ஒரு சில சிறிய அளவிலான விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.
அதன்பின்னர் 5.30 மணியளவில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. ஓமனில் ஏற்பட்ட இந்த மின் தடைக்கான காரணம் நெட்வொர்க்கின் டிரான்ஸ்மிஷன் லைன் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒரு சில மணி நேரங்கள்தான் என்றாலும் திடீரென ஏற்பட்ட மின்தடை அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.