அமீரக செய்திகள்

UAE: பயணிகளின் வசதிக்காக துபாயில் இருந்து அபுதாபி ஏர்போர்ட்டிற்கு பேருந்து சேவை அறிமுகம்..!!

துபாய் மற்றும் அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான புதிய ஒப்பந்தத்தை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. இந்த சேவையானது அபுதாபி விமான நிலையத்தை துபாயின் இபின் பத்துதா பேருந்து நிலையத்துடன் ‘எக்ஸ்பிரஸ் பஸ் ரூட்டில்’ இணைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த விரைவு பேருந்து சேவைக்காக கேபிடல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துடன் RTA இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது.

முதற்கட்டமாக தற்போது, ​​இந்த சேவை Wizz Air விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேருந்தில் பயணிப்பதற்கான கட்டணம் டிக்கெட்டுகளில் சேர்க்கப்படும் என்றும் இந்த வழித்தடத்தில் செல்லும் கோச் பேருந்துகளில் பயணிகள் லக்கேஜ் வைப்பதற்கான வசதிகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

துபாயில் இந்த சேவையை எளிதாக்குவதற்கு தேவையான பார்க்கிங் இடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை RTA வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்னு பத்துதா பேருந்து நிலையத்தில் அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக RTA பணிப்பாய்வுகளை கண்காணித்து மேற்பார்வை செய்யும் என்றும் அதே நேரத்தில் கேபிடல் எக்ஸ்பிரஸ், தங்கள் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பைக் கையாளும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் துபாய்-அபுதாபி போக்குவரத்து சேவைகளை “பெரிய அளவில் மேம்படுத்தும்” என்று RTA பொது போக்குவரத்து முகமையின் CEO அஹமது ஹாஷிம் பஹ்ரோஸ்யான் கூறியுள்ளார். இது பற்றி அவர் தெரிவிக்கையில் “தனியார் துறையுடன் கூட்டு சேர்வது RTA இன் பொது-தனியார் கூட்டாண்மையை வலுப்படுத்தும். அத்துடன் ஆணையம் எப்போதும் அனுபவங்களை பரிமாறிக்கொள்வதற்கும் அதன் பொது சேவை சலுகைகளை மேம்படுத்துவதற்கும் ஒரு வழிமுறையாக மேற்கொள்ள முயல்கிறது. இது அமீரகத்தின் போக்குவரத்துத்துறையில் விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது” என்று கூறியுள்ளார்.

கேபிடல் எக்ஸ்பிரஸ் ஃபார் ரேபிட் இன்டர்சிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி இயாத் இஷாக் அல் அன்சாரி கூறுகையில்: “அபுதாபி சர்வதேச விமான நிலையம் உட்பட இரு எமிரேட்ஸின் முக்கிய பகுதிகளுக்கும் இடையேயான நேரடி இணைப்பு, அபுதாபிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றும் இரு சுற்றுலாப் பயணிகள் மற்றும் விமான அனுபவத்தை மேம்படுத்தும் பயண வசதிகளை வழங்கும்” என தெரிவித்துள்ளார்.

இந்த சேவை தற்பொழுது wizz air விமானத்திற்கு மட்டுமே என்றாலும் அடுத்தடுத்த கட்டத்தில் மற்ற விமான நிறுவனங்களின் பயணிகளுக்கும் இந்த பேருந்து சேவை வழங்கப்படலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!