வளைகுடாப் பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இராணுவ ரீதியான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், 24 இந்தியக் குழுவினருடன் ஓமன் கடற்கரைக்கு அப்பால் சென்று கொண்டிருந்த ‘MT Settebello’ என்ற எண்ணெய் கொண்டு செல்லும் டேங்கர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், இருவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாலுமிகளை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இந்தியாவின் கடல்சார் சமூகத்திற்கு ஒரு “பேரிழப்பு” என்று குறிப்பிட்ட சோனோவால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும், இறுதிச் சடங்குகளுக்காக உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாகத் தாயகம் கொண்டு வருவதை உறுதி செய்யவும் அரசு உறுதியுடன் செயல்படுவதாகவும் உறுதியளித்துள்ளார்.
பலாவு நாட்டு கொடியுடன் இயங்கிய அந்த டேங்கர் கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளில் 21 பேர் மீட்கப்பட்ட நிலையில், மூன்று பேர் முதலில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவர்கள் மூவரும் இச்சம்பவத்தில் உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இக்கப்பல் ஈரானிய எண்ணெயைக் கொண்டு சென்றதாகவும், அமெரிக்கப் படைகளின் உத்தரவுகளைப் பின்பற்றத் தவறியதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவம் இக்கப்பல் மீது “துல்லியமான தாக்குதல்” (precision strike) என்று விவரிக்கப்பட்ட ஒரு தாக்குதலை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குப் பதிலடியாக, வணிகக் கப்பல் மீதான தாக்குதலுக்கு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், புது தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொறுப்புத் தூதர் (Chargé d’Affaires) ஜேசன் மீக்ஸை வரவழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மேலும், இப்பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்தும் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இத்தகைய சம்பவங்கள் ஆழ்ந்த கவலையளிப்பவை என்றும், மத்திய கிழக்கில் நிலவும் மோதல் மற்றும் அதிகரித்து வரும் பதற்றங்களின் விளைவாகவே இவை நிகழ்கின்றன என்றும் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இப்பகுதியில், குறிப்பாக வளைகுடா மற்றும் அருகிலுள்ள சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் கடல்சார் வர்த்தகப் பாதைகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel