வளைகுடா செய்திகள்

அடுத்த மாதம் முதல் கத்தாருக்கு விசிட்டர்கள் வர தற்காலிக தடை.. யாருக்கு அனுமதி..?? காரணம் என்ன..??

உலகில் பெரும்பாலான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஒரு விளையாட்டான கால்பந்து   விளையாட்டின் FIFA உலக கோப்பை போட்டியானது ஒவ்வொரு முறையும் மக்களிடையே அதிகளவு எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும். அந்த வரிசையில் 2022-ம் ஆண்டிற்கான உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறவிருப்பது அனைவருக்கும் தெரியும்.

இதற்காகவே கடந்த சில ஆண்டுகளாக கத்தார் அதற்குரிய வேலையில் மும்முரமாக செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அதிலும் இந்த உலக கோப்பை போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் கத்தார் அரசால் வழங்கப்படும் Fan ID-யான Hayya Card என்பதை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்து அதனை ரசிகர்களுக்கு வழங்கியும் வருகிறது.

இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியானது நடைபெற இன்னும் சில நாட்களே இருப்பதால் எந்தவித சிரமமும் இல்லாமல் எளிதாக நடைபெறுவதற்கு பல்வேறான முயற்சிகளையும் ஒழுங்குமுறைகளையும் தற்பொழுது கத்தார் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு படியாக கால்பந்து போட்டி நடைபெறவிருக்கும் காலங்களில் கத்தாருக்கு விசிட்டர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை கத்தாரின் தலைநகரான தோஹாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியை சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்காக நவம்பர் 1 முதல் டிசம்பர் 22 வரை கத்தாரின் வான், தரை மற்றும் கடல் எல்லைகள் வழியாக சுற்றுலாவாசிகள் நாட்டிற்குள் நுழைவதை கத்தார் அரசு தடை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாவாசிகளின் நுழைவு டிசம்பர் 23 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் FIFA உலகக் கோப்பை 2022 இல் கலந்துகொள்பவர்களுக்காக வழங்கப்படும் ரசிகர் ஐடியான கத்தார் ஹய்யா அட்டை வைத்திருப்பவர்கள் தடை விதிக்கப்பட்டிருக்கும் காலமான நவம்பர் 1 முதல் டிசம்பர் 23 வரை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் ஜனவரி 23 வரை நாட்டில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த நுழைவுத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பிரிவுகளில் கத்தார் குடிமக்கள், கத்தார் குடியிருப்பாளர்கள் மற்றும் கத்தார் அடையாள அட்டை வைத்திருக்கும் GCC குடிமக்கள் ஆகியோர் அடங்குவர் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வேலைவாய்ப்பு விசாக்கள் மற்றும் பணி நுழைவு அனுமதி (work permit) வைத்திருப்பவர்களுக்கும் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட பிரிவினருடன் சேர்த்து கத்தார் விமான நிலையங்கள் வழியாக பயணிக்கும் பயணிகளில் மனிதாபிமான அடிப்படையில் அதிகாரப்பூர்வ விண்ணப்ப தளத்தின் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றிருந்தால் அவர்களுக்கும் இத்தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் FIFA உலகக் கோப்பை 2022 இன் வெற்றிகரமான அமைப்பை உறுதி செய்வதற்காக புதிய பயண விதிகளுக்கு கட்டுப்படுமாறு அனைவருக்கும் கத்தாரின் உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!