UAE: உலகசாதனை படைத்த ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்.. அது என்ன சாதனை தெரியுமா..?

அமீரகத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று துவங்கிய 15ஆவது ஆசிய கோப்பையில் 6 அணிகள் விளையாடி வருகின்றன். அதில் லீக் சுற்றின் முடிவில் ஹாங்காங், வங்கதேசம் ஆகிய அணிகள் ஆரம்பத்திலேயே வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. அந்த நிலைமையில் செப்டம்பர் 3ஆம் தேதி அன்று துவங்கிய சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதின.
ஷார்ஜாவில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 175/6 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து 19.1 ஓவரில் 179/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
முன்னதாக இப்போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் உலகிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளை நடத்திய மைதானம் என்ற ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் சாதனையை தகர்த்து உலக சாதனை படைத்துள்ளது.
கடந்த 1982-இல் உருவாக்கப்பட்ட இந்த மைதானம் 90களில் இதர மைதானங்களை காட்டிலும் உலகின் முன்னணி நாடுகள் பங்கேற்ற நிறைய முத்தரப்பு தொடர்களை நடத்தியது. அந்த வகையில் இதுவரை 9 டெஸ்ட், 244 ஒருநாள், 28 டி20 போட்டிகள் என 281 போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ள இந்த மைதானம் புதிய சாதனை படைத்துள்ளது.
அந்த மைதானத்திற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானம் 280 போட்டிகளை நடத்தியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மைதானமாக போற்றப்படும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் 278 போட்டிகளை நடத்தியுள்ளது.