அமீரக செய்திகள்

அமீரகத்தில் முடிவுக்கு வரும் கோடைகாலம்.. இன்னும் இரு நாட்களில் பருவநிலை மாற்றம்.. NCM தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த கோடை காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைய இருப்பதாக அமீரகத்தின் தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது. மேலும் வானியல் கணக்கீடுகளின்படி, அமீரகத்தில் வரும் செப்டம்பர் 23 ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.04 மணிக்கு இலையுதிர் கால நிகழ்வு தொடங்கும் என்றும் தேசிய வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் கூறுகையில், இந்த நிகழ்வானது நாட்டில் இலையுதிர் கால பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும், இனி வரும் நாட்களில் பகல் மற்றும் இரவு சம நீளமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதாவது சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் முறையே காலையிலும் மாலையிலும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் இருக்கும் என்றும், இலையுதிர் பருவம் முடிந்து குளிர்காலம் தொடங்கும் போது, ​​இரவுகள் நீளமாகவும் பகல் நேரம் குறைவாகவும் இருக்கும் எனவும் NCM கூறியுள்ளது.

இது குறித்து NCM இயக்குநர்கள் குழுவின் தலைவர் இப்ராஹிம் அல் ஜார்வான்த் வெளியிட்டுள்ள பதிவில், இலையுதிர் காலத்தில் அமீரகத்தின் வெப்பநிலை 40 °C முதல் 20 °C வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அமீரகத்தில் சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது நாட்டில் இரவு நேரங்களில் குளிர்ந்த கற்று வீசத் தொடங்கியுள்ளது. மேலும் நாட்டின் ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழையும் மற்றும் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது.

அமீரகத்தை பொறுத்தவரை குளிர்காலம் என்பது டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை என நான்கு மாதங்களுக்கு நீடிக்கும். இந்த நாட்களில் நாட்டில் வெயிலின் தாக்கம் சற்றும் இல்லாமல், பகல் நேரங்களிலும் குளிர்ந்த காற்று வீசும் என்பதும், இந்த குறிப்பிட்ட மாதங்களில் அமீரகத்திற்கு வரும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை பெருமளவில் உயரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!