UAE: துபாயின் பிரமாண்ட நூலகத்தில் இடம்பெற்றுவரும் தமிழ் நூல்கள்..!

துபாய் நகரின் ஜடாப் பகுதியில் ஏழு மாடிகளைக் கொண்ட புத்தக வடிவிலான அமைப்பு கொண்ட முஹம்மது பின் ராஷித் நூலகம்செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் அரபி, ஆங்கில உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூல்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு தமிழ்மொழி நூல்களுக்கென பிரத்யேக பகுதியை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ் ஆர்வலர்கள் பலர் நூல்களை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தமிழின் தொன்மையான நூலான தொல்காப்பியத்துக்கு புலியூர் கேசிகன் என்ற எழுத்தாளர் உரை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள அவரின் முதலாவது நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு புலியூர் கேசிகன் நூற்றாண்டு ஆகும். அவரது நூற்றாண்டை கவுரவிக்கும் வகையில் தமிழ் வரலாற்று ஆய்வாளர் கவிதா சோலையப்பன் நூலக அலுவலர்அப்துல் ரஹ்மானிடம் வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட அவர் தமிழ் நூல்களை தொடர்ந்து வழங்கி வரும் ஆர்வலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இது குறித்து ஆய்வாளர் கவிதா கூறியதாவது: துபாய் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட நூலகம் அறிவுக் கருவூலமாக திகழ்ந்து வருகிறது. இதில் தமிழ் நூல்கள் கொண்ட பகுதியும் இடம் பெற இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை தமிழர்கள்அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.