புதிய சீசனுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ள துபாய் சஃபாரி பார்க்.. அறிவிப்பை வெளியிட்ட துபாய் முனிசிபாலிட்டி..!!

அமீரகத்தில் கோடைகாலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஆங்காங்கே சிறிது சிறிதாக பொழுதுபோக்கு இடங்கள், நிகழ்வுகள் என அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதை போலவே கோடை காலத்தை முன்னிட்டு மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற துபாய் சஃபாரியானது மீண்டும் திறக்கவிருப்பதாக துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.
2022-ம் ஆண்டிற்கான சஃபாரி சீசன் திறக்கப்படுவதற்கான தேதியை முனிசிபாலிட்டி தற்பொழுது வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த சஃபாரி பார்க் செப்டம்பர் 27 முதல் மீண்டும் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த சஃபாரி பார்க்கில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகையான விலங்குகள் தங்கள் இயற்கை வாழ்விடங்களைப் போன்ற காலநிலை கட்டுப்பாட்டு சூழலில் வாழ்கின்றன.
தற்பொழுது திறக்கப்படவுள்ள இந்த பார்க்கில் சுமார் 3,000 விலங்குகள் உள்ளன என்றும் ஆப்பிரிக்க கிராமம், ஆசிய கிராமம், அரேபிய பாலைவன சஃபாரி, எக்ஸ்ப்ளோரர் கிராமம் மற்றும் பள்ளத்தாக்கு பகுதி உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள் கொண்ட பகுதிகளை பார்வையாளர்கள் இந்த பார்க்கில் அனுபவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
சஃபாரி பிளஸ் ட்ரிப் போன்ற பல்வேறு பேக்கேஜ்கள், மற்ற சிறப்பு டூர் பேக்கேஜ்கள் உள்ளிட்ட வெவ்வேறு பார்வையாளர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் அளவிலும் இங்கு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் கோடை காலத்தையொட்டி இந்த பார்க் மூடப்பட்டிருந்தது. துபாய் சஃபாரி பார்க்கின் இந்த புதிய சீசனானது தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இது பற்றிய கூடுதல் தகவலுக்கும், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கும், www.dubaisafari.ae என்ற இணையதளத்தை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
.@DMunicipality: @DubaiSafari Park to open doors for a new season on 27 September 2022. pic.twitter.com/0CTU6yvyBE
— Dubai Media Office (@DXBMediaOffice) September 25, 2022