அமீரக சட்டங்கள்

UAE: பார்க் செய்த காரில் தெரியாத நபர் மோதி காரை சேதப்படுத்தி இருந்தால் என்ன செய்வது..??

அமீரகத்தில் நீங்கள் உங்கள் வாகனத்தை முறைப்படி ஒரு குறிப்பிட்ட இடத்தில் சரியாக நிறுத்தி இருந்திருந்தாலும் கூட சில நேரங்களில் வாகனத்தை நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்க்கையில் உங்கள் வாகனம் சேதமடைந்திருப்பதைக் காணலாம். இத்தகைய சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கீழே காணலாம்.

நீங்கள் நிறுத்தியிருந்த வாகனம் சேதமடைந்திருப்பதற்கு, மற்றொரு வாகனம் பின்னோக்கி வருகையில் உங்களது வாகனத்துடன் மோதி விடுவது அல்லது பக்கத்து வாகன கதவு திறக்கப்படும் போது உங்கள் வாகனத்தில் கீறலை உண்டாக்குவது போன்றவை காரணங்களாக இருக்கலாம்.

இது போன்ற சூழ்நிலைகளில் உங்கள் வாகனத்தின் நிலைமை எத்தகையதாக இருந்தாலும், நீங்கள் எதையும் செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது குறித்து தெரிவிக்க வேண்டும். ஏனெனில் எந்தவொரு வாகன விபத்தையும் அதன் தீவிரத்தைப் பொருட்படுத்தாமல் காவல்துறைக்கு புகாரளிக்க வேண்டும் என அதிகாரிகள் வாகன ஓட்டிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் பாதிக்கப்பட்ட நபர்கள்  999 ஐ டயல் செய்து, தெரியாத நபர் உங்கள் வாகனத்தை சேதப்படுத்தியதாகவும், உங்களுக்கு போலீஸ் உதவி தேவை என்றும் ஆபரேட்டரிடம் விளக்க வேண்டும் என்றும் அத்துடன் உங்கள் இருப்பிடத்தை விளக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உங்களை தேடி வரும் அதிகாரிகளிடம் உங்களிடம் ஓட்டுநர் உரிமம், கார் பதிவு அட்டை மற்றும் எமிரேட்ஸ் ஐடி அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றை அவர்கள் கேட்கும்போது முன்வைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதத்தை ஆதாரமாக படம் எடுப்பதும் நல்லது.

RoadSafety-UAE இன் படி, அருகில் இருக்கும் CCTV கேமராக்களையும் நீங்கள் சரிபார்க்கலாம். அமீரகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான மால் வாகன நிறுத்துமிடங்களில் சிசிடிவி உள்ளது. வாகனம் நிறுத்தப்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இருந்து குற்றம் புரிந்தவர் கண்டறியப்பட்டால் அதிகாரிகள் குற்றவாளிக்கு உரிய தண்டனைகளை வழங்குவார்கள். ஒருவேளை CCTV இல்லையெனில் உங்கள் வாகனத்தை சரி செய்ய நீங்களே பில் கட்ட வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தெரியாத நபருக்கு எதிராக போக்குவரத்து விபத்து அறிக்கையை வழங்குவதற்கான ஆன்லைன் சேவையை  அபுதாபி எமிரேட்டில் காவல்துறை வழங்குவதாக விளக்கியுள்ளது. இந்தச் சேவையின் மூலம், அடையாளம் தெரியாத ஓட்டுநரால் வாகனம் சேதமடைந்திருந்நால், அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக பாதிக்கப்பட்ட வாகன ஓட்டுநர் விபத்து அறிக்கையைக் கோரலாம்.

அதிகாரிகள் சேத அறிக்கையை கணக்கிட்டு, அதனை சரிசெய்வதற்கான  கட்டணத்தை வெளியிடுவார்கள், அதை நீங்கள் உங்கள் இன்சுரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பலாம். மேலும் போலீஸ் அறிக்கை இல்லாமல் உங்கள் வாகனத்தை சரிசெய்ய முடியாது என்பதையும், இந்த அறிக்கை இல்லாமல் இன்சுரன்ஸ் நிறுவனங்கள் பழுதுபார்க்கும் செலவுகளை ஈடுசெய்யாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!