அமீரக சட்டங்கள்

UAE: இந்த 10 காரணங்களுக்காக முதலாளி எந்த முன்னறிவிப்பும் இன்றி தொழிலாளியை வேலையை விட்டு நீக்கலாம்..!! அது என்னென்ன..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த ஃபெடரல் சட்டம் 1980 சட்டம் எண் 8-ல், நிறைய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய அமீரக தொழிலாளர் சட்டம் 2022ஐ அமீரக அரசு அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த புதிய சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 2 ம் தேதியில் இருந்து அமீரகம் முழுவதும் நடைமுறைக்கும் வந்துள்ளது.

அவ்வாறு புதிதாக கொண்டுவரப்பட்டு, தற்பொழுது நடைமுறையில் இருக்கும் 2022 சட்டத்தின்படி, ஒரு முதலாளி அவரது நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியை 10 காரணங்களுக்கு எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் உடனடியாக வேலையை விட்டு நீக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமீரகத்தில் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுங்குமுறைகள் அனைத்தும் இந்த புதிய தொழிலாளர் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன்படி ​​புதிய தொழிலாளர் சட்டத்தின் 44வது பிரிவு, முன் அறிவிப்பு இல்லாமல் தொழிலாளியை பணிநீக்கம் செய்தல் என்ற தலைப்பில் என்னென்ன காரணங்களுக்காக தொழிலாளியை டெர்மினேட் செய்யலாம் என்பதற்கான முழு விபரங்களையும் தெரிவித்துள்ளது. அதனைப் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

>> வேலையில் சேர்ந்த ஒரு தொழிலாளி முதலாளியை ஏமாற்றி பொய்யான சான்றிதழ்களை வைத்து நிறுவனத்தில் இணைந்திருந்தாலோ அல்லது பொய்யான ஆவணங்கள், ஐடி போன்றவை மூலம் வேலைக்கு சேர்ந்திருந்தாலோ அவரை எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் உடனடியா வேலையை விட்டு நீக்க முடியும்.

>> ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தொழிலாளி அவரது நிறுவனத்திற்கு பொருள் இழப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் செய்தாலோ அல்லது நிறுவனத்தின் சொத்துக்களை வேண்டும் என்றே சேதப்படுத்தினாலோ, அந்த தொழிலாளியை எச்சரிக்கை ஏதும் செய்யாமலேயே வேலைய விட்டு நீக்க முடியும். ஆனாலும், இந்த விவகாரத்தில் நிறுவனமானது இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதை 7 வேலை நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும்.

>> நிறுவனத்தின் வேலை பற்றிய விபரங்கள், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற தொழிலாளிகளின் பாதுகாப்பு அல்லது நிறுவனத்தில் விதிகள் மற்றும் நெறிமுறைகள் சம்பந்தமாக, வேலையில் சேர்ந்திருக்கும் தொழிலாளிக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எழுத்துபூர்வமாக ஒரு கடிதத்தில் கொடுத்து, அதில் அந்த தொழிலாளி கையொப்பமிட்ட பின்னரும் அந்த விதிகளை மீறி செயல்பட்டிருந்தால் அவரையும் அதிரடியாக வேலையை விட்டு நீக்க முடியும்.

>> வேலைக்கு சேரும்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, ஒரு தொழிலாளி தன்னுடைய கடமையை ஒழுங்காக செய்யாமல் இருக்கும்போது, அந்த தொழிலாளிக்கு அதை தெரியப்படுத்தும் விதமாக இரண்டு முறை எச்சரிக்கை கடிதம் (warning letter) கொடுத்தும் அதனை திருத்திக் கொள்ளாமல் இருந்தால் அந்த தொழிலாளியை உடனடியாக வேலைய விட்டு நீக்க முடியும்.

>> ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருத்தர் தன்னுடைய தனிப்பட்ட லாபத்துக்காக நிறுவனத்தின் ரகசியங்களை வெளியிட்டாலோ, அல்லது வேறு யாருக்கும் அது சம்பந்தமான ஆவணங்களை கொடுத்து, அதனால் அவருடைய நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டாலோ இல்லை நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய வேலை கிடைக்காமல் போனாலோ, இந்த தவறை புரிந்த தொழிலாளியை அதிரடியாக நீக்க முடியும்.

>> ஒரு தொழிலாளி அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் நேரம் குடிபோதையில் இருந்தாலோ அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தாலோ அல்லது ஒழுக்கத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டிருந்தாலோ அவரையும் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் வேலையை விட்டு நீக்க முடியும்.

>> வேலையில் இருக்கும் ஒரு தொழிலாளி தன்னுடைய முதலாளி அல்லது மேனேஜர் அல்லது சூப்பர்வைஸர் அல்லது உடன் பணிபுரியும் தொழிலாளர்களை மோசமான வார்த்தைகளால் திட்டினாலோ அல்லது கைகலப்பில் ஈடுபட்டாலோ அந்த தொழிலாளியையும் உடனடியாக வேலையை விட்டு நீக்க முடியும்.

>> ஒரு தொழிலாளி வேலையில் சேர்ந்ததுக்கு பின்னரும், அவருடைய முதலாளி ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சட்டபூர்வமான அல்லது நியாயமான காரணம் எதுவும் இல்லாமல், ஒரு வருடத்தில் 20 நாட்களுக்கு மேல் வேலைக்கு வராமல் இருந்தாலோ அல்லது தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மேல் வேலைக்கு வராமல் இருந்தாலோ, அந்த தொழிலாளியை முன்னறிவிப்பு ஏதும் கொடுக்காமல் வேலைய விட்டு நிறுத்த முடியும்.

>> தன்னுடைய தனிப்பட்ட லாபத்துக்காகவும், வசதிக்காகவும், தன் பதவியை துஷ்பிரயோகம் செய்யும் தொழிலாளர்களையும் அந்த நிறுவனம் அதிரடியாக நீக்க முடியும்.

>> வேலைக்கு சேரும்போது முதலாளியும் தொழிலாளரும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் படி, பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்காமல் அந்த தொழிலாளி வேறொரு நிறுவனத்தில் சேர்ந்தால் அவரையும் உடனடியா வேலையை விட்டு நீக்க முடியும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!