அமீரக செய்திகள்

UAE: வீடு புகுந்து 3.5 இலட்சம் திர்ஹம்ஸ் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த நபர்கள்..!! அதிரடியாக கைது செய்த காவல்துறை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபர்களை விரைந்து செயல்பட்டு குறைவான நேரத்திலேயே கைது செய்து, திருடிய பொருட்களை பத்திரமாக மீட்டுக்கொடுத்துள்ளனர் காவல்துறை அதிகாரிகள்.

அமீரகத்தின் ஒரு எமிரேட்டான அஜ்மானில் 350,000 திர்ஹம்ஸ் மதிப்பிலான நகை மற்றும் பணங்களை வீடு புகுந்து கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு குறைந்த நேரத்திலேயே கைது செய்து சாதனை படைத்துள்ளனர். இது பற்றி காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், அஜ்மானின் அல் நுவைமியா காவல் நிலையத்திற்கு ஒரு ஆசிய நாட்டைச் சேர்ந்த குடும்பத்திடம் இருந்து வீட்டில் திருட்டு நடந்ததாகவும், அதில் விலையுயர்ந்த நகைகள், பணம் மற்றும் பிற பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்ததாக கூறியுள்ளனர். 

அஜ்மான் காவல்துறையின் இயக்குநர் கர்னல் அகமது சையத் அல் நுவைமி கூறுகையில், மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நுவைமியா பகுதியில் உள்ள வீடு குறிவைத்து தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். அவர் இது பற்றி தெரிவிக்கையில் “குடும்பத்தினர் வெளியே சென்று வீட்டிற்கு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, ​​வீடு முழுவதும் உடைகள், ஃபர்னிச்சர்கள் மற்றும் பிற பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த தங்க நகைகள், பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதை கண்டுபிடித்துள்ளனர். பின் அவர்கள் காவல்துறைக்கு இது குறித்து புகார் அளித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

புகாரைப் பெற்ற போலீஸ் ரோந்து, குற்றப் புலனாய்வுக் குழுக்கள் மற்றும் CID குழுக்கள் நான்கு நிமிடங்களில் வீட்டை அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து  மேற்கண்ட விரைவு சோதனையில் குற்றவாளிகள் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்தது தெரியவந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் லாக்கரை உடைத்து, 350,000 திர்ஹம்ஸ் மதிப்பிலான நகை, 6,000 திர்ஹம்ஸ் ரொக்கம் மற்றும் சில சாதனங்களைத் திருடியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின் அல் ரஷிதியா பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்குள் திருடர்களை காவல்துறை விசாரணைகள் நடத்தியதன் பலனாக பிடித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, ​​அந்த நபர், தானும் தனது கூட்டாளியும் வீட்டைக் கண்காணித்து, குடும்பம் வெளியில் செல்வதற்காகக் காத்திருந்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் திருடப்பட்ட பொருட்கள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவலையும் அவர்கள் காவல்துறைக்கு தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருடர்கள் செலவழித்த சிறிய தொகையைத் தவிர்த்து, நகைகள் மற்றும் பொருட்களை குடும்பத்தினருக்கு திருப்பித் அளித்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். தங்களது நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை மீண்டும் பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்ததோடு, குற்றத்தை வெளிக்கொணருவதில் அவர்களின் விரைவான நடவடிக்கையையும் பாராட்டியுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!