லைஃப் ஸ்டைல்

160 கிமீ வேகத்தில் பயணிக்கும் சோலார் காரை அறிமுகப்படுத்திய அமீரகம்..!! விலை எவ்வளவு தெரியுமா..??

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது அதில் கூடுதலாக சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் வாகனங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

அதன்படி உலகின் முதல் நீண்ட தூரம் பயணிக்கும் வகையிலான சூரிய மின்சார வாகனம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஷார்ஜா ரிசர்ச், டெக்னாலஜி அண்ட் இன்னவேஷன் பார்க்கின் (SRTI Park) CEO ஹுசைன் முகமது அல் மஹ்மூதி, நெதர்லாந்தைச் சேர்ந்த Lightyear நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த சோலார் மின்சார வாகனத்தின் முதல் பதிப்பை அமீரகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த நிறுவனம் ஆரம்பத்தில் அதன் முதல் பதிப்பான “Lightyear O” இன் 500 யூனிட்களை தயாரித்ததாகவும் அவற்றில் பெரும்பாலானவை விற்றுத் தீர்ந்துவிட்டன என்றும் அல் மஹ்மூதி கூறியுள்ளார். இந்த நிறுவனமானது தனது இணையதளத்தில் வாகனத்தின் விலையை 250,000 யூரோக்கள் (கிட்டத்தட்ட 900,000 திர்ஹம்கள்) என நிர்ணயித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிராந்தியத்தில் இந்த வாகனம் வாங்க ஆர்வமுள்ளவர்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் வாகனத்தை ஆர்டர் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ மற்றும் பேட்டரி வரம்பு 625 கிமீ ஆகும். 

வாகனத்தின் உட்புறம் தாவர அடிப்படையிலான தோல், மறுசுழற்சி செய்யப்பட்ட PET பாட்டில் துணிகள் ஆகியவற்றிலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ளதால், வாகனம் மிகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் வாகனம் ஒருவரின் ஓட்டும் பழக்கம், இருப்பிடம் மற்றும் பருவகாலத்தைப் பொறுத்து ஓட்டுநர் வரம்பு மாறுபடும் என்றும் நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் “இந்த நிறுவனம் தயாரிக்கும் வாகனத்தின் மற்ற பதிப்பான -lightyear 2 – 30,000 டாலர் முதல் 35,000 டாலர் வரை என மிகவும் மலிவு விலையில் இருக்கும். விரைவில் இது அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்படும்” என்று ஷார்ஜாவில் முதல் மாடலை அறிமுகப்படுத்திய பிறகு அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில் “சூரிய தொழில்நுட்பத்தை சோதிக்க ஐக்கிய அரபு அமீரகம் சிறந்த இடமாகும். விரைவில், இங்கு வெவ்வேறு சோலார் கார்கள் கிடைக்கும், ஏனெனில் இப்பகுதியில் சோலார் தயாரிப்புகளை உருவாக்க சிறந்த வாய்ப்பு உள்ளது. விரைவில், சூரிய சக்தியில் 3,000 கிமீ தூரம் வரை பயணிக்கும் காரை இங்கு காண்பீர்கள். அத்துடன் நாங்கள் ஹைட்ரஜன் காரையும் கொண்டு வர இருக்கிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!