வளைகுடா செய்திகள்

சவூதி: 13 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை.. வெள்ளத்தில் இருவர் உயிரிழப்பு..!! பலர் மீட்பு..!!

சவூதி அரேபியாவின் கடலோர நகரமான ஜித்தாவில் வியாழன் அன்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. வியாழன் அன்று ஜித்தா முழுவதுமான பெரும்பாலான பகுதிகள் புயல், இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் வெள்ளப்பெருக்கை கண்டது.

இதனால் அங்கு பள்ளிகள் மூடப்பட்டு விமானங்கள் தாமதமாக்கப்பட்டன. மேலும் மக்காவுக்கான சாலையும் மூடப்பட்டது. பின்னர் மக்கா-ஜித்தா விரைவுச் சாலையில் இரு திசைகளிலும் மாலைக்குப் பிறகு போக்குவரத்து சீரானதாக கூறப்பட்டது. 

முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் விமானம் மற்றும் வாகன போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. எச்சரிக்கை நிலை பிறப்பிக்கப்பட்டதுடன், மழையுடன் கூடிய காலநிலையில் மக்கள் கவனமாக இருக்குமாறும், வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஜித்தா நகரில் காலை முதல் பெய்த கனமழையால் பல தெருக்களில் வாகனங்கள் பழுதாகின. இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. கனமழை பெய்ததினால் நீரில் மூழ்கிய வாகனங்களுக்குள் சிக்கியிருந்த பலர் மீட்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வியாழன் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஜித்தாவில் பதிவான மழையின் அளவு, 2009 இல் பதிவான அளவை விட, ஆறு மணி நேரத்தில் 179 மிமீயை எட்டியதாக தேசிய வானிலை ஆய்வு மையத்தை (NCM) மேற்கோள் காட்டும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து ஜித்தாவில் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும், போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு வசதியாக தெருக்களில் இருந்து தண்ணீர் மற்றும் கழிவுகளை வெளியேற்றவும் ஜித்தா நகரசபையானது 2,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!