வளைகுடா செய்திகள்

கத்தார்: கோலாகலமாக ஆரம்பித்த FIFA உலக கோப்பை..!! துவக்க விழாவில் கலந்து கொள்ளும் அமீரக பிரதமர், துபாய் இளவரசர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், கத்தாரில் 2022 உலகக் கோப்பை தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக தோஹா சென்றுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவருடன் துபாய் பட்டத்து இளவரசரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் உடன் சென்றுள்ளார். கத்தார் சென்றடைந்துள்ள ஷேக் முகமது மற்றும் பட்டத்து இளவரசர் ஆகியோரை கத்தார் துணை எமிரான ஷேக் அப்துல்லா பின் ஹமத் அல் தானி வரவேற்றிருக்கிறார்.

அதே போல் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அமைச்சர்கள் குழுவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உலகக் கோப்பை தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக கத்தார் வந்தடைந்ததாக சவூதி அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முகமது பின் சல்மானுடன் நாட்டின் எரிசக்தி, உள்துறை, வெளியுறவு, வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தேசிய காவலர் தலைவர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் வந்ததாக அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவித்துள்ளன.

மேலும் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக எகிப்து அதிபர், ஓமானில் இருந்து கலாச்சார, சுற்றுலா துறை அமைச்சர் உள்ளிட்ட வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பல்வேறு தலைவர்களும் ஞாயிற்றுக்கிழமை கத்தார் வந்தடைந்திருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 12 ஆண்டு கால உழைப்பிற்குப் பிறகு ஒரு மாத காலம் நடைபெறும் கால்பந்து கண்காட்சி இறுதியாக ஆரம்பமாகியுள்ளது. தோஹாவிற்கு வெளியே 50 கிலோமீட்டர்கள் (31 மைல்) தொலைவில் உள்ள அல்கோரில் இருக்கும் அல் பைத் மைதானத்தில் நடத்தப்படும் 2022ம் ஆண்டிற்கான முதல் உலகக் கோப்பை போட்டிக்கு மேற்கண்ட தலைவர்களுடன் பிற வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகள், VIP-கள் மற்றும் பிரபலங்களும் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று உலக கோப்பையை நடத்தும் நாடான கத்தார் தனது நாட்டின் அணியுடன் ஈகுவடார் அணியை எதிர்கொள்வதன் மூலம் உலகக் கோப்பைக்கான முதல் போட்டி தொடங்குகிறது என கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!