அமீரக சட்டங்கள்

இன்று கொண்டாடப்படும் அமீரக கொடி தினம்: கொடியை அவமதித்தால் 25 ஆண்டுகள் சிறை, 5 இலட்சம் திர்ஹம்ஸ் அபராதம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 3 ம் தேதி கொண்டாடப்பட்டு வரும் “UAE Flag Day” இந்த வருடமும் இன்று கொண்டாடப்படவுள்ளது. இதற்காக அமீரகத்தின் துணைத் தலைவர் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னரே இந்த நாளில் அமீரக தேசிய கொடியை பறக்க விடுமாறு குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 3ம் தேதியான, இன்று காலை 11 மணிக்கு லட்சக்கணக்கான அமீரக கொடிகள் ஒரே நேரத்தில் உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

அமீரகத்தில் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வரும் அமீரக கொடி நாளின் 10 வது ஆண்டு கொடி தினத்தை இன்று அமீரகம் சிறப்பாக கொண்டாடவுள்ளது. இந்த நாளில், அரசு கட்டிடங்கள், தனியார் அலுவலகங்கள், வீடுகள், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் அமீரக கொடிகள் உயரமாகவும் பெருமையாகவும் பறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், இது பற்றி மக்களுக்கு நினைவூட்டும் வகையில் ட்விட்டரில், “நமது கொடி உயர்த்தப்படும். நமது பெருமை மற்றும் நமது ஒற்றுமையின் சின்னம் நிலைத்திருக்கும்… நமது பெருமை மற்றும் இறையாண்மையின் பதாகை வானத்தில் உயர்ந்து நிற்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

அமீரக தேசிய கொடி பற்றிய சில தகவல்கள்:

>> ஐக்கிய அரபு அமீ்கத்தின் கொடி 1971 ஆம் ஆண்டில் அப்போது 19 வயதான அப்துல்லா முகமது அல் மாய்னா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 

>> ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கொடியை முதன்முதலில் அமீரகத்தின் தந்தையான மாண்புமிகு ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் டிசம்பர் 2, 1971 அன்று பறக்க விட்டுள்ளார்.

>>  கொடியின் வடிவம் செவ்வகமானது. அத்துடன் கொடியானது நீளத்தை விட இரு மடங்கு அகலம் கொண்டது.

>> ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய சின்னங்கள் அவர்களுக்கு உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். கொடியை அவமதிப்பது அல்லது தவறாகப் பயன்படுத்தினால் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும்/அல்லது 500,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். 

>> ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடியானது தீவிர வானிலை நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் நீடித்த மற்றும் வலுவான துணியாக இருக்க வேண்டும். அரசு நிறுவனங்களில் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட கொடியின் பொருட்கள் பாலிஸ்டர் அல்லது கனமான பாலிமைடு நூல்களைக் (100 சதவீதம் நைலான்) கொண்டிருக்கும்.

>> அரசாங்க கட்டிடத்தின் நுழைவாயிலில் பல கொடிக்கம்பங்கள் எழுப்பப்பட்டிருந்தால், ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி எப்போதும் நுழைவாயிலுக்கு அருகில் உயர்த்தப்படும்.

>>கடந்த ஆண்டு, எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனமானது அமீரக தேசிய கொடியை விண்வெளிக்கு அனுப்பியது. அந்த கொடியானது வினாடிக்கு 5.5 மீட்டர் வேகத்தில் 32,182 மீட்டர் உயரத்தை எட்டியதாக கூறப்பட்டது.

>>  கடந்த 2017 ல் ஷார்ஜா உலகின் மிகப்பெரிய கொடியை ஏற்றி கின்னஸ் சாதனை படைத்தது. அதன்படி 70 மீட்டர் நீளம் மற்றும் 35 மீட்டர் அகலம் கொண்ட அமீரக கொடியானது, நிலையான கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட மிகப்பெரிய கொடிக்கான கின்னஸ் உலக சாதனையை படைத்தது.

>> அதனைத் தொடர்ந்து 2019 இல், ஐக்கிய அரபு அமீரக கொடியானது வானில் இருந்து பறக்கவிடப்பட்டது. 144.28 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்த கொடியானது ஸ்கைடைவர் குழு ஒன்றால் பாம் ஜூமேரா பகுதியில் ஸ்கைடைவ் செய்து கொண்டே காட்சிபடுத்தப்பட்டது. துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!