அமீரக சட்டங்கள்

UAE: சைக்கிள், இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!! விதிமீறல்களுக்கு 500 திர்ஹம் வரை அபராதம்..!!

பாதசாரிகள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பகுதிகளைப் பயன்படுத்தும் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இ-ஸ்கூட்டர்களுக்கு எதிராக அபுதாபி காவல்துறை புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பாதசாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இ-ஸ்கூட்டர்கள் பயன்படுத்துவது குறித்து குடியிருப்பாளர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

சைக்கிள் ஓட்டுபவர்களில் சிலர் பொறுப்பற்றவர்களாக இருப்பதாகவும் இந்த நடைபாதைகளைப் பயன்படுத்தும் பாதசாரிகளை மதிக்க மாட்டார்கள் என்றும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்தவும், அதன் பயனர்களுக்கான போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பல்வேறு முக்கிய சந்திப்புகளில் பாதசாரிகளின் பாதுகாப்பைப் பராமரிப்பதற்குமான முயற்சிகளின் ஒரு பகுதியாக போக்குவரத்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. 

இதன் காரணமாக சைக்கிள் ஓட்டும்போது பாதுகாப்புத் தேவைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு சைக்கிள் ஓட்டுபவர்களை காவல்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் சைக்கிள் ஓட்டுபவர்கள் சர்வீஸ் சாலைகள் மற்றும் சைக்கிள் டிராக்குகளில் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று காவல்துறையினர் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதசாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதே வேளையில் சைக்கிள் ஓட்டுபவர்கள் கவனத்துடன் மற்றும் எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

போக்குவரத்து அதிகாரிகளின் கூற்றுப்படி, அபுதாபி எமிரேட்டில் சைக்கிள்கள் மற்றும் எலக்ட்ரிக் பைக்குகளின் பயன்பாடு குறித்த விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்த அபராதங்களானது 200 முதல் 500 திர்ஹம் வரை என விதிமீறல்களைப் பொறுத்து மாறுபடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!