அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் விசிட் விசா குறித்த புதிய அறிவிப்பு..!! டிராவல் ஏஜென்ட் நிறுவனங்கள் கூறுவது என்ன..?? அமலுக்கு வரும் நடைமுறை..!!

வெளிநாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் விசாவில் வர கூடியவர்கள், தங்களின் விசா காலம் முடிந்து விட்டால், இனி வரும் நாட்களில் அதனை புதுப்பித்துக்கொள்ளவோ, அல்லது விசா காலத்தை நீட்டித்து கொள்ளவோ முடியாது என்ற புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த புதிய அறிவிப்பை அமீரகத்தில் இயங்கி வரும் பல டிராவல் நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளது.

விசிட் விசா தொடர்பாக வெளிவந்துள்ள இந்த செய்தி குறித்து முறையான அறிவிப்பு இம்மிகிரேஷன் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டதாகவும், விசா புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கப்பட்ட பல விண்ணப்பங்கள் நிராகரிக்க படுவதாகவும் அமீரகத்தில் இயங்கி வரும் டிராவல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குறிப்பிட்ட நாட்களுக்கான விசிட் விசாவில் வந்து தங்கியிருப்பவர்கள்,மேலும் கூடுதல் காலம் அமீரகத்தில் தங்க விரும்பினால், தங்களின் விசா காலத்தை நீட்டித்துக்கொள்வது பொதுவாக மேற்கொள்ளப்படும் நடைமுறையாகும். ஆனால், இமிகிரேஷன் துறையின் புதிய அறிவிப்பின்படி, இனி இவர்களால் நாட்டிற்கு உள்ளே விசிட் விசாவை புதுப்பிக்கவோ, நீட்டித்துக்கொள்ளவோ முடியாது எனவும், இந்த செயல்முறைக்கு கண்டிப்பாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி மற்றும் துபாய் எமிரேட்டுகளில் உள்ள டிராவல் ஏஜெண்ட்களின் கூற்றுப்படி, இனி வரும் நாட்களில் நாட்டை விட்டு வெளியேறாமல் அமீரகத்தின் விசிட் விசா நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயைச் சேர்ந்த ஒரு டிராவல் ஏஜென்ட் நிறுவனம் கூறுகையில், நாட்டை விட்டு வெளியேறாமல் விசா நீட்டிப்பு செய்யும் நடைமுறையானது நிறுத்தப்பட்டுள்ளதாக, இமிகிரேஷன் துறையால் இன்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுநோய் காரணமாக நாட்டை விட்டு வெளியேறாமல் உள்நாட்டிலேயே விசிட் விசாவை புதுப்பித்துக்கொள்ளும் தளர்வு இதற்கு முன்பாக இருந்தது. ஆனால் இப்போது அந்த தளர்வு திரும்பப் பெறப்பட்டுள்ளது எனவும் இமிகிரேஷன் துறையிலிருந்து பெறப்பட்ட செய்தியில் இருந்ததாக அந்த டிராவல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அபுதாபியை தளமாகக் கொண்ட ஒரு டிராவல் நிறுவனம் கூறுகையில், “நாட்டிற்கு உள்ளேயே விசிட் விசாக்களின் புதுப்பித்தல் மற்றும் நீட்டிப்பு செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளன. அதற்காக விண்ணப்பதாரர்கள் நாட்டை விட்டு வெளியேறி பின்னர் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இது கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய நாட்களில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் போன்றது. நாம் இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளோம், எனவே அந்த தளர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது. மேலும் விசிட் விசா காலத்தை நீட்டிப்பு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட பல விண்ணப்பங்கள் தற்போது நிராகரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!