அமீரக செய்திகள்

அமீரகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த நிறுவனங்கள் முடிவு.. .. ஆய்வின் முடிவில் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த ஆண்டில் சம்பளம் அதிகளவு உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமீரக தொழிலாளர் சந்தையில் தகுதியான தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமே தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.

இதனடிப்படையில் 2023 இல் தொழிலாளர்கள் இரட்டை இலக்க சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. தொழிலாளர் சந்தையில் திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறையின் விளைவாக, நிறுவனத்தில் ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர்கள் கோரியதை விட 2022 இன் பிற்பகுதியில் கிட்டத்தட்ட இருமடங்காக சம்பளத்தை உயர்த்த கோரியுள்ளனர் என்று அமீரகத்தில் இருக்கும் HR மற்றும் ஆட்சேர்ப்புத் துறை நிர்வாகிகள் கூறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 10-15 சதவிகித சம்பள உயர்வை எதிர்பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், வேலைகளை மாற்றும் போது படிப்படியாக 25-30 சதவிகிதம் சம்பள உயர்வை கோர ஆரம்பித்துள்ளதாகவும், அதே நேரத்தில் பெரும்பாலான முதலாளிகள் திறமையான ஊழியர்களை தங்களது நிறுவனத்தில் ஈர்ப்பதற்காக 15-20 சதவிகிதம் சம்பளம் உயர்த்தி கொடுப்பதை ஒரு விதிமுறையாகக் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த ஆண்டில் 5 சதவீத சம்பள உயர்வை செல்படுத்திய நிறுவனங்கள் இந்த ஆண்டு 10 சதவீதமாக அதனை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அமீரக தொழிலாளர் சந்தையில் இருக்கும் காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தகுதியான தொழிலாளர்களின் பற்றாக்குறை, மற்றும் சம்பள உயர்வை எதிர்பார்க்கும் ஊழியர்கள் போன்ற மாற்றங்களினால், 2008 க்குப் பிறகு முதல் முறையாக இரட்டை இலக்க சம்பள உயர்வை எதிர்கொள்கிறோம் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டில் அமீரகத்தில் உள்ள 53 சதவீதத் தொழிலாளர்கள் சம்பள உயர்வைப் பெறுவார்கள் என்று வேலை வாய்ப்பு போர்ட்டல் நிறுவனமான Bayt மற்றும் YouGov நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆய்வின் போது பதிலளித்தவர்களில் 57 சதவீதம் பேர் தங்களின் தற்போதைய சம்பளப் பேக்கேஜ் அடிப்படைச் சம்பளம் மற்றும் சலுகைகளை உள்ளடக்கியதாகவும், 26 சதவீதம் பேர் அடிப்படைச் சம்பளம் மட்டுமே பெறுவதாகவும் கூறுகின்றனர். சுமார் 30 சதவீத ஊழியர்கள் தங்கள் நிறுவனம் கூடுதல் நேர வேலைக்கு பணம் செலுத்துவதாக கூறியுள்ளனர்.

தொழிலாளர்களுக்கான தனிப்பட்ட மருத்துவக் காப்பீடு, வருடத்திற்கு ஒரு மாத விடுமுறையுடன் கூடிய விமானப் பயண டிக்கெட் மற்றும் நிறுவனத்தை விட்டு நீங்கும் போது இறுதியில் வழங்கப்படும் சேவை ஊதியம் ஆகியவை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறந்த நன்மைகளாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!