அபுதாபி: மீண்டும் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் அல்மக்தா பிரிட்ஜ் … புதுப்பித்தல் மற்றும் பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள அல் மக்தா பாலத்தின்(Al Maqta Bridge) முதல்கட்ட புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக அபுதாபி நகர முனிசிபாலிட்டி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இத்திட்டத்தை அபுதாபி முனிசிபாலிட்டி, நகராட்சிகள் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து ஏப்ரல் 2022 இல் தொடங்கியது.
இதில் பாலத்தின் கீழ் அடுக்குகள் (asphalt layers), பாலத்தின் இரு பக்கங்களிலும் உள்ள பாதசாரிகளுக்கான நடைபாதைகள் (Pedestrian Walkways), பாலத்தில் உள்ள உலோக அமைப்புகள், பாலத்தின் அடியில் உள்ள கான்கிரீட் மற்றும் வண்ணம் தீட்டுதல் போன்ற பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து விரிவாகத் தெரிவிக்கையில், பாலத்தின் அடிப்பகுதியில் 16,100 சதுர மீட்டர் அளவுக்கு உள்ள இரும்புப் பகுதிகள், பாலத்தின் மேற்பகுதியில் 4,130 சதுர மீட்டருக்கு அமைந்துள்ள இரும்பினால் ஆன வளைவுகள், 8,500 சதுர மீட்டரில் உள்ள பழமையான கான்கிரீட் பாகங்கள், 600 மீட்டருக்கு நீளமான பாதசாரி நடைபாதைகள் மற்றும் வண்ணம் தீட்டுதல் (repainting) போன்ற பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாலத்தின் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் அல் மக்தா பாலம் மிக உயர்ந்த தரத்தில் இருக்கும் என்றும் முனிசிபாலிட்டி கூறியுள்ளது. அத்துடன் இந்த பழமையான பாலத்தை தனித்துவமான கட்டமைப்பு அடையாளங்களுடன் பரமரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்டுள்ள அல் மக்தா பாலத்தின் வரலாறு:
அபுதாபி வரலாற்றின் முக்கிய பிரதிபலிப்பாக விளங்கும் அல் மக்தா பாலம் 1967-ஆம் ஆண்டுக் கட்டப்பட்டது. இந்த தூண்கள் அனைத்தும் அபுதாபி, துபாய் மற்றும் அல் அய்ன் ஆகிய நகரங்களுக்கு இடையேயான பழங்கால வாழ்க்கை முறை மற்றும் பாதசாரிகள் பயணிக்கும் பழங்கால வழித்தடங்களை நினைவுபடுத்துகின்றன. அல் மக்தா பிரிட்ஜிற்கு அருகில் இருக்கும் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் பழமையான அல் மக்தா டவர் முன்பொரு காலத்தில் அபுதாபியின் நுழைவாயிலுக்கு பாதுகாப்பு அரணாக இருந்துள்ளது.
முசாஃபா பாலம், ஷேக் சயீத் பாலம் மற்றும் ஷேக் கலீஃபா பாலம் ஆகியவற்றுடன் அபுதாபியை இணைக்கும் பாலங்களில் அல் மக்தா பாலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.