Uncategorized

UAE: ராஸ் அல் கைமா மாலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து.. புகைமண்டலமாக காட்சியளித்த மேற்கூரை பகுதி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் இன்று (செவ்வாய்க்கிழமை) திடீரென தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ளவர்கள் அனைத்தும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஸ் அல் கைமாவில் இருக்கக்கூடிய RAK மாலில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மாலின் மேற்கூரையிலிருந்து அதிகளவு புகை வெளியேறும் வீடியோவானது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, பிற்பகல் 2.10 மணியளவில் மாலில் தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புக் குழுவினர் தீயை அணைக்க முயன்றதாக கூறப்பட்டுள்ளது. தீவிர நடவடிக்கைகளுக்குப் பின் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேற்கூரையின் ஒரு சிறிய பகுதியில் ஏற்பட்ட தீ மட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை இந்த சம்பவத்திற்கான காரணம்
குறித்து தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதேநேரத்தில், விபத்திற்கு பின்னரும் ஷாப்பிங் சென்டர் முழு திறனுடன் செயல்படுவதாக அதன் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐஸ் ரிங்க், இன்டோர் கோ-கார்டிங் மற்றும் சினிமா உட்பட மூன்று தளங்களில் பல்வேறு வகையான பொழுதுபோக்கு இடங்களை மூன்று தளங்களில் உள்ளடக்கியுள்ள RAK மால் 2012 இல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!