அமீரக செய்திகள்

UAE: உணவு தயாரிப்புகளில் பூச்சிகளை சேர்ப்பதாக வெளியான தகவல்.. உண்மை என்ன.? சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (Ministry of Climate Change and Environment – MOCCE), சந்தைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான சில வதந்திகளுக்கு விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது சில ஐரோப்பிய நாடுகள் ஒரு சில உணவு தாயரிப்புகளில் பூச்சிகளைச் (insects) சேர்க்க அனுமதிப்பதாக சமூக ஊடகங்களில் பரவலாக ஒரு சிலரால் பகிரப்பட்டது. இது போன்ற தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து UAE-யில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களிலும் பூச்சிகள் இல்லை என்பதை MOCCE உறுதிப்படுத்தியுள்ளது.

இதுபோன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தகவல்கள் போலியானது என்று கூறிய அமைச்சகம், அதை மற்றவர்களுக்குப் பகிர்வதற்கு முன்பு, நாட்டின் அதிகாரப்பூர்வ அதிகாரிகளிடம் தகவலைச் சரிபார்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் உணவு தானியங்களில் காணப்படும் வெட்டுக்கிளியின் சில பாகங்கள் மற்றும் தேன் போன்ற இயற்கையிடமிருந்து நேரடியாகப் பெறப்படும் உணவுகளில் எதர்ச்சியாகக் காணப்படும் தேனீக்களின் பாகங்களைத் தவிர்த்து, மற்ற பூச்சிகளும், புழுக்களும் ஹலால் சான்றிதழ் அங்கீகாரம் கிடைக்காத உணவுகளாகக் கருதப்படுவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அமீரகத்தின் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் சுகாதார விதிமுறைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள விவரக்குறிப்புகளைக் கடைபிடித்துத் தாயரிக்கப்பட்டுள்ளதா என்பதையும் அமைச்சகம் ஆய்வு செய்துள்ளது, அனைத்து உணவுப் பொருட்களும் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், இஸ்லாமிய ஷரியாவின் ஹலால் தரங்களைப் பெற்றுள்ளன என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

பூச்சிகள் அல்லது அவற்றிடமிருந்து பெறப்படும் சில பதார்த்தங்களைக் கொண்ட எந்தவொரு உணவுப் பொருட்களும் ‘ஹலால்’ சான்றிதழுடன் இருக்க வேண்டும் என்று நினைவூட்டியுள்ள அமைச்சகம், அங்கீகாரம் பெற்ற ஆராய்ச்சி மையங்களில் நடத்தப்படும் ஆய்வக சோதனைகள் மூலம் உணவுப்பொருளின் தர நிர்ணயம் உறுதி செய்யப்படுவதாகவும் கூறியுள்ளது. மேலும், பூச்சிகளைக் கொண்ட அனைத்து பொருட்களும் தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம் அதன் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பட்டியலில், நான்கு பூச்சிகளுடன் தொடர்புடைய சில குறிப்பிட்ட புதிய தயாரிப்புகளை “நாவல் உணவு (novel food)” என்று சேர்த்ததை அடுத்து, கத்தார் நாட்டில் பூச்சிகளை உட்கொள்வதற்கான தடையை கத்தார் அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!