அமீரக செய்திகள்

UAE: ரமலான் மாதம் முழுவதும் மூன்று நாட்கள் வார விடுமுறை.. பொதுத்துறை ஊழியர்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட எமிரேட்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதம் நாளை (மார்ச் 23) தொடங்கவிருக்கும் நிலையில் உம் அல் குவைன் அரசாங்கம் தனது ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ வேலை நேரத்தை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான ஒரு சுற்றறிக்கையில், உம் அல் குவைன் எமிரேட்டில் உள்ள அனைத்து உள்ளூர் அரசாங்க நிறுவனங்களுக்கும் ரமலானின் போது மூன்று நாள் வார இறுதி விடுமுறை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஊழியர்கள் ரமலான் காலத்தில் வாரத்திற்கு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறையில் இருப்பார்கள். வாரத்தின் மற்ற நாட்களான திங்கள் முதல் வியாழன் வரையிலான நான்கு நாட்களுக்கு வேலை நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரக உச்ச கவுன்சில் உறுப்பினரும் உம் அல் குவைனின் ஆட்சியாளருமான ஷேக் சவுத் பின் ரஷீத் அல் முல்லாவின் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. உம் அல் குவைனை தவிர பொதுவாகவே ஷார்ஜா எமிரேட்டில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமீரக அரசு அறிவித்துள்ள ரமலான் வேலை நேரங்களில் காலத்தின் போது அமைச்சகங்கள் மற்றும் ஃபெடரல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கான அதிகாரப்பூர்வ வேலை நேரம் திங்கள் முதல் வியாழன் வரை 9:00 முதல் 14:30 வரையிலும், வெள்ளிக்கிழமை 9:00 முதல் 12:00 வரையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தனியார் துறை ஊழியர்களுக்கான அறிவிப்பில், ரமலான் மாதத்தில் தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரங்களில் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதனுடன் சேர்த்து ஷார்ஜா மற்றும் உம் அல் குவைனில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறையை பெறுவார்கள் என்பது தற்பொழுது தெளிவாகியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!